பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/199

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கட்டபொம்மன்,
கப்பலோட்டிய தமிழன்

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களுடன் நான் தமிழரசுக் கழகத்தில் தொண்டு செய்துகொண்டிருந்தபோது, தங்கமலை ரகசியம் என்ற திரைப்படக் கதை ஒன்றை பத்மினி பிக்சர்ஸ் உரிமையாளர் திரு.பி.ஆர். பந்துலு அவர்களிடம் சொன்னேன்.

கதை, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடிப்பதற்காகவே சொல்லப்பட்டது.

வசனம் மிகச்சிறப்பாகப் பேசி அற்புதமாக நடிக்கும் ஆற்றல் பெற்ற சிவாஜி அவர்கள், வாய் பேசாமலே சிறப்பாக நடிப்பதற்காக பாதிக் கதை வரையில், வாய் பேசத் தெரியாத வாலிபனாகவும், பின்னர் பேசத் தெரிந்தவனாகவும் ஒரு கதாபாத்திரத்தை சிருஷ்டி செய்தேன்.

கதாநாயகன் குழந்தையாக இருக்கும்போது சூழ்ச்சியின் காரணமாகக் காட்டில் வீசப்படுகிறான். அக்குழந்தையை யானைகள் எடுத்து வளர்ப்பதாக கதை.

யானைகள் எப்படி எப்படி ஒரு குழந்தையை வளர்க்கும்-யானைகள் என்னென்ன வேலை செய்யும் என்பதை எல்லாம் இதற்காக நான் பல சர்க்கஸ் கம்பெனிகளில் விசாரித்து ஒரளவு தெரிந்து வைத்திருந்தேன். அதனால் திரு. பந்தலு அவர்கள் என்னையும் தன் கூடவே இருந்து படப்பிடிப்பிற்கு உதவியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.