பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

199



இச்சூழ்நிலையில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் வீர பாண்டிய கட்டபொம்மன் என்ற அற்புதமான நாடகத்தை அரங்கேற்றம் செய்தார்.

அந்த நாடகம் தமிழகத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது.

திரு. பி. ஆர். பந்துலு உள்ளத்திலும் ஒரு புதிய வேகத்தை ஏற்படுத்தியது.

நாடகம் முடிந்து நாங்கள் வீடு திரும்பும்போது திரு. பந்துலு அவர்கள். என்னிடம், “சரி, உங்கள் விருப்பப்படி கட்டபொம்மன் பட வேலையை நாளையே துவக்குங்கள்” என்றார்.

நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

மறுநாள் முதலில் நான் செய்த காரியம் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் வீட்டுக்கு பி.ஆர்.பந்துலுவைக் கூட்டிக் கொண்டுபோய், ம.பொ.சி. அவர்களுக்கு மாலை மரியாதை செய்து “கட்ட்பொம்மன் படம் தயாரிக்கச்சிறந்த ஆலோசனைகள் அடிக்கடி சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுதான்.

அதுபோல திரு. ம.பொ.சி.அவர்கள் கட்டபொம்மன் படம் முழுவதற்கும் கூடவே இருந்து உதவி செய்தார்கள். கட்டபொம்மன் படப்பிடிப்பு சென்னை கோல்டன் ஸ்டுடியோவில் ஆரம்பமானது. முருகன் கோவில் செட் போட்டிருந்தோம். விளக்கேற்றி வைத்து ஆரம்பிக்க வேண்டிய பணியை என்னைச் செய்யும்படி திரு. பி.ஆர். பந்துலு சொன்னார்.

பக்கத்திலிருந்த அனைவரிடமும் இந்தப்படம் எடுக்க என்னைத் தூண்டியவர் சின்ன அண்ணாமலைதான். அதனால் அவர் விளக்கேற்றி வைப்பதுதான் முறை, என்று சொல்லி எனக்கு மாலை அணிவித்தார்.