பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

சொன்னால் நம்பமாட்டீர்கள்



கட்டபொம்மன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ்த் திரைப்படத்துறைக்கு ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கியது.

ஆசியாவிலே சிறந்த படம் என்ற பரிசை கெய்ரோவில் அதற்குக் கொடுத்தார்கள்.

இதை எல்லாம் பார்த்துநான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்னைப்போலவே திரு. ம.பொ.சி. அவர்களும் பெருமகிழ்ச்சி. அடைந்தார்கள். கட்டபொம்மன் படத்தைப் போலவே ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற திரைப்படத்தை திரு.பி.ஆர். பந்துலு எடுப்பதற்கு மூல காரணம் எனது முயற்சியே.

பந்துலு கூடவே நான் இருந்தபடியால் அவரிடம் அடிக்கடி பேசக்கூடிய வாய்ப்பு இருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ‘கப்பலோட்டிய தமிழன்’ பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

என்உள்ளத்தில், கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்றவர்களைப் பற்றி பதியவைத்தவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.தான்.

திரு.ம.பொ.சி. இந்த முயற்சி எடுக்கவில்லை என்றால் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழனுக்கு இவ்வளவு பேரும் புகழும் வந்திருக்குமா, என்பது சந்தேகமே!

பின்னர் பி.ஆர்.பந்துலு கப்பலோட்டிய தமிழன் என்ற திரைப்படத்தை எடுத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் வ. உ. சிதம்பரனாராக நடித்து இறவாத புகழ் பெற்றார்.