பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

229


கேட்டார். நான் சிறிது யோசனை செய்தேன். ஆனால் அண்ணாவோ, “எதற்கு யோசனை செய்கிறீர்கள்? உங்கள் மனதில் இருப்பதைச் சொன்னால்தானே எனக்கும் சில விஷயங்கள் புரியும்” என்றார்.

“நூல் தீருகிறவரை கழி சுற்றிக் கொண்டேயிருக்கும்” என்றேன்.

“விளக்கம் தேவை” என்றார்.

“இந்தி எதிர்ப்பு என்ற மாயை தீரும்வரை தி.மு.க.ஆட்சி இருக்கும்,” என்றேன்.

“இதுதான் காங்கிரஸ்காரர்களுடைய அபிப்பிராயமா?” என்றார்.

“பெரும்பாலோருடைய எண்ணம்”, என்றேன்.

“அது சரி. 67 தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தீர்களா?” என்றார்.

“என் சொந்த அபிப்பிராயம் 62 தேர்தலில் தங்களைக் காஞ்சீபுரத்தில் தோற்கடித்ததுதான் 67-ல் காங்கிரஸ்தோற்றதற்குக் காரணம்,” என்றேன்.

“எப்படி” என்றார்.

“தங்களை 62-ல் வெற்றிபெற விட்டிருந்தால் தாங்கள் இவ்வளவு முனைப்பாக வேலை செய்து தங்களுக்குப் பரம எதிரியான ராஜாஜி முதலியவர்களுடன் சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கமாட்டீர்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டிருந்திருப்பீர்கள். காலம் ஓடியிருக்கும். இதை நான் அப்போதே காமராசரிடம் சொன்னேன். காஞ்சிபுரம் தேர்தல் கூட்டங்களில் பேசவும் மறுத்துவிட்டேன்,” என்றேன்.