பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

23


காலை 5 மணி இப்படி பல மாதிரியாக வருவேன். நான் வந்து சாப்பிட்ட பிறகுதான் அவள் சாப்பிடுவாள்.

அவளுக்கு அரசியல் எல்லாம் தெரியாது. “எதற்காக நம் கணவர் இப்படி எல்லாம் கஷ்டப்படவேண்டும்? நேரா நேரத்தில் சாப்பிடாமல் தூங்காமல், தொண்டை வலிக்கப் பேசி, பல இடங்களுக்கு அலைந்து திரிந்து ஏன் சிரமப்பட வேண்டும்?” என்று நினைப்பாள்.

அவள் எதுவும் கேட்டால் உனக்கு ஒன்றும் தெரியாது. பேசாமல் வாயை மூடிக்கொண்டு கிட, என்று நான் எத்தனையோ முறை அலட்சியமாக அவளைப் பேசியிருக்கிறேன். ஆயினும் அதை எல்லாம் அவள் மனதில் வைத்துக் கொள்ள மாட்டான், “நம் கணவன்- நம் குழந்தைகள்- நம்குடும்பம்” நன்றாக இருக்க வேண்டும். நாலுபேர் நம்மைப்பற்றி கெளரவமாக நினைக்க வேண்டும். இதுதான் அவளுக்குத் தெரிந்தது.

யாருக்கும் எந்தத் தீங்கும் மனதால் கூடநினைக்க அவளுக்குத் தெரியாது. 1942-ல் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசாரின்கெடுபிடியில் மிகவும் சிரமப்பட்டு விட்டாள். மக்கள் திருவாடானை சிறைச்சாலையை உடைத்து என்னை விடுதலைசெய்ததும், நான் தலைமறைவாகச் சென்றுவிட்டேன். அச்சமயம் எங்கள் வீட்டில் நடைபெற்ற ஒரு திருமணத்தை ஒட்டி நான் வந்திருப்பேன் என்று போலீசார் யூகித்து, திருமண வீட்டிற்குள் புகுந்து பெருங்கலாட்டா செய்து விட்டார்கள். அதில் என் மனைவி அகப்பட்டுக் கொண்டாள்.

கைக் குழந்தையுடன் இருந்த அவளை ஓட ஓட விரட்டி அடித்தார்கள் போலீசார். அவள் விரலில் போட்டிருந்த விலை மதிப்புள்ள வைர மோதிரம் ஒன்று கீழே விழுந்து விட்டது. அதை எடுக்கக்கூடப் பயந்து எடுக்காமலேயே ஒடியிருக்கிறாள். மோதிரம் போனது போனதுதான்.