பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முதல் காங்கிரஸ் கூட்டம்

நான் ‘மைக்’ இல்லாத காலத்தில் மேடையில் பேசத் துவங்கியவன். நான் காங்கிரஸ் கூட்டங்களில் பேச ஆரம்பித்த காலங்களில் கூட்டம் நடத்த யாரும் முன் வரமாட்டார்கள். அச்சகத்தில் துண்டுப்பிரசுரம் அச்சடித்துக் கொடுக்கமாட்டார்கள். “காங்கிரஸ் கூட்டம் என்று” அச்சடித்தால் ஒரு வேளை போலீஸ் தொந்தரவு ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்ற பயம்தான் காரணம்!

முதன் முதலில் நான் பேசிய காங்கிரஸ், கூட்டம் என் நினைவுக்கு வருகிறது. கூட்டம் நடத்துவதற்கு அப்போது நான் கையாண்ட முறை, கழுத்தில் ஒரு தமுக்கைக் கட்டிக்கொண்டு தெருத் தெருவாகச் சென்று தமுக்கடித்து, “இன்று மாலை ஜவஹர் மைதானத்தில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம், நானே பேசுவேன் அனைவரும் வருக” என்று உரக்கச் சத்தம் போட்டுக் கொண்டே சென்றேன்.

மாலையில் ஜவ்ஹர்மைதானம் சென்றால் மேடை இல்லை. ‘மைக்’ இல்லை எதுவுமே இல்லை. அதற்காக கொஞ்சமும் மனம் தளராமல் பக்கத்திலிருக்கும் பெட்டிக்கடையிலுள்ள ஒரு பெஞ்சைத் தூக்கிப் போட்டு, ஒரு கம்பை ஊன்றி அதில் ஒரு அரிக்கேன் விளக்கை மாட்டி, காங்கிரஸ் கொடியை ஒரு பக்கம் நட்டு, பெஞ்சிமேல் ஏறி நின்று, “அன்பார்ந்த சகோதர சகோதரிகளே” என்று உரக்கப் பேச ஆரம்பித்தேன். எதிரில் பிரம்மாண்டமான கூட்டமாக ஏழேபேர் அமைதியின் சொரூபமாக அமர்ந்திருந்தார்கள். அனைவரும் எனது நெருங்கிய உறவினர்கள், சொந்தக்காரப் பையன் என்ன பேசப் போகிறான் என்று பார்க்க வந்தவர்கள்.