பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழிசை மகாநாடு

தமிழிசை இயக்கம் தோன்றிய நேரம் சிதம்பரத்தில் முதல் தமிழிசை மாநாடு நடைபெற்று பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இயற்கையாகவே தமிழ் உணர்ச்சி அதிகமுள்ள எனக்கு, அச்செய்திகள் எனது உள்ளத்தில் ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிற்று.

சிதம்பரத்தில் நடந்தது போல ஒரு பெரிய மாநாடு சொந்த ஊரான தேவகோட்டையில் நடத்த வேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று இரவு பகல் அதே கனவு கண்டவர்களிடமெல்லாம் தமிழ் இசை மாநாட்டைப் பற்றியே பேச்சு. இதில் எனக்கு மிகுந்த உற்சாக மூட்டியவர் என் அருமை நண்பர் திரு டி.ஆர். அருணாசலம் அவர்கள்.

ஆகவே அவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். இருவரும் கையிலிருந்து செலவு செய்து சில நோட்டீஸ்கள் அச்சடித்து தமிழிசை மாநாடு நடைபெறப் போவதாக விளம்பரம் செய்தோம். ஊரில் பரவலாகக் கொஞ்சம் ஆதரவு கிடைக்கும் போலிருந்தது. சங்கீத வித்வான்கள் அனைவருக்கும் கடிதம் போட்டோம்.

இலக்கியப் புலவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பினோம். அனைவரின் பதில்களும் உற்சாக மூட்டக் கூடிய வகைகளாக இருந்தன. அடுத்தது மாநாட்டிற்காக நிதி வசூல் தொடங்கினோம். வீடு வீடாகச் செல்லும்போதுதான் தமிழிசையைப் பற்றி பலருக்கு புரியவில்லை என்று தெரிந்தது.