பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

53


இத்தனைக்கும் அந்த ஊரில் மாதம் தவறாமல் நடைபெறும் பல கல்யாணங்களில் சங்கீத கச்சேரிகள் நடைபெற்றுகொண்டிருந்தன.

“எதுக்குத் தமிழில் பாடவேண்டும்?” “இதற்கு ஏன் மாநாடு?” “தமிழில் பாட முடியுமா?” “தமிழில் பாட பாட்டுக்கு எங்கே போவது?” “இசையில் ஏன் பாஷை விவகாரம்?” என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டுப் பலர் எங்களை அதைரியப்படுத்தினார்கள். ஆனால் எங்களுடைய தமிழுணர்ச்சி அதை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்க விடவில்லை.

திட்டங்கள் பிரமாண்டமானதாகப் போடப்பட்டன. ஆனால் நிதி வசூல் எப்படி செய்வதென்று தெரியவில்லை. பல பேர் மாநாட்டை கைவிடும்படி உபதேசம் வேறு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். என்ன வந்தாலும் சரி, எடுத்தகாரியத்தை முடிக்காமல் விடுவதில்லை என்று உறுதி பூண்டோம். சுமார் பத்தாயிரம் ரூபாய் வசூலானால் மாநாடு சிறப்பாக நடைபெறும் என்று திட்டம் போடப்பட்டது.

ரூபாய் பத்தாயிரத்துக்கு எங்கே போவது? இந்நிலையில் மாநாட்டுக் காரியங்களில் தானாக வந்து உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்டு அல்லும் பகலும் எங்களுடன் பணிபுரிந்து வந்த அன்பர் ஒருவர், இராஜா, சர். அண்ணாமலை செட்டியார் அவர்களிடம் சென்று முயற்சிக்கலாமே என்றார்.

நானும் திரு டி.ஆர்.அருணாசலம் அவர்களும் தீவிர காங்கிரஸ்காரர்கள். பலமுறை ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அவர்களை மேடையில் தாக்கி பேசி இருக்கிறோம். ஆகவே காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் ராஜா சர் அவர்கள் வாசற்படி ஏறுவதே தவறு என்பதாக நினைப்பவர்கள். அப்படியிருக்க, அவரிடம் எப்படிப் போவது? ஆயினும் அந்த அன்பர் விடவில்லை.