பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

65


வார்டன் ஓடி வந்து இதோ சாவி இருக்கிறது” என்று சாவியைக் கொடுத்தார். சாவி வேண்டியது இல்லை. உடைத்துதான் திறப்போம் என்று மக்கள் பெரும் முழக்கம் போட்டார்கள்.

அதன்படியே அவர்கள் கொண்டு வந்திருந்த கடப்பாரை முதலிய ஆயுதங்களால் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயில் பூட்டை உடைத்துத் தகர்த்து கதவைத் திறந்தார்கள்.

பட்டப் பகல் 12 மணிக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள், சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் இம்மாதிரி சிறைக் கதவை உடைத்து ஒரு அரசியல் கைதியை விடுதலை செய்தது சரித்திரத்தில் அதுதான் முதல் தடவை.

அந்தச் சரித்திர சம்பவத்திற்கு நான் காரணமாக இருந்தேன் என்று நினைக்கும்போது இன்றும் நான் பெருமைப்படுகிறேன். இந்தியாவில் வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை எளியேனுக்குக் கிடைத்தது.

மக்களுடைய மாபெரும் சுதந்திர எழுச்சியின் வேகத்தில் நடைபெற்ற சக்தி மிகுந்த இந்தத் திருவாடனை ஜெயில் உடைப்புச் சம்பவம், தமிழகத்தின் ஒரு கோடியில் ராமேஸ்வரம் அருகில் நடைபெற்றதால் இந்தியா முழுவதும் விளம்பரம் இல்லாமல் அமுங்கி விட்டது.

தமிழ்நாட்டுத் தலைவர்களும், இச்சம்பவத்தின் பெருமையை உணரவில்லை. மதிப்பிற்குரிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் 1942 சிறையிலிருந்து தப்பியதே பெரிய வீரச்செயல் என்று நாடுபோற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் திருவாடானையில் மக்கள் திரண்டு சிறைச்சாலையை உடைத்து ஆங்கில ஏகாதிபத்தியம் கைதுசெய்து வைத்திருந்த ஒரு சுதந்திர போராட்ட வீரனை விடுதலை செய்ததை நாடு முழுமையாக அறிந்து கொள்ளவுமில்லை, பாராட்டவும் இல்லை.

சொ.ந.5