பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

சொன்னால் நம்பமாட்டீர்கள்


வெடிக்குமா? வெடிக்காதா? என்று தெரியாததால் அவைகளைச் சரமாரியாக வீசிக்கொண்டு இருந்தார்கள்.

இந்நிலையில் போலீஸார் தங்களைக் காத்துக் கொள்ளச்சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். குண்டுகளை பொழிந்து தள்ளினர். என் இடதுகையில் ஒரு குண்டு பாய்ந்தது. மக்களின் முன்னால் நின்ற என் மீது மேலும் குண்டுபடக்கூடாது என்று பலபேர் மாறி மாறி என் முன்னால் நின்று தங்கள் மார்பில் போலீஸாரின் குண்டுகளை ஏற்று வீர மரணம் எய்தினார்கள். இம்மாதிரி தியாகம் செய்த பெரு வரலாற்றை நான் படித்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. இந்த மாபெரும் தியாகத்தை இன்று நினைத்தாலும் எனது மெய் சிலிர்த்துவிடுகிறது.

பல பேர் ஒரு தேசபக்தனைக் காப்பதற்கு உயிரைக் கொடுப்பது என்பது வீரகாவியமாகப் பாடவேண்டிய அத்தியாயமாகும். எவ்விதப் பிரதி பிரயோசனமும் கருதாமல் தங்கள் இன்னுயிரை ஈந்த அந்த மாபெரும் தியாகிகளுக்கு இந்த நாடு என்றும் தலை தாழ்த்தி வணங்கக் கடமைப்பட்டுள்ளது.

இப்படிப் பல பேரைச் சுட்டு வீழ்த்தி விட்டு போலீஸார் தப்பி ஓடிவிட்டார்கள். சிலர் இறந்து வீழ்ந்ததும் பலர் உடம்பிலிருந்து இரத்தம்தெறித்ததும், அங்கு கூடியிருந்த மக்கள் ஒரு நிமிடத்தில் எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் ஒடிவிட்டனர்.

நானும் எனது நண்பர் இராமநாதனும் பிணக்குவியலின் மத்தியில் நின்று கொண்டு இருந்தோம். உயிர் போன பலரும், உயிர்போகும் தருவாயில் சிலரும், கை, கால், கண்போன சிலரும் ஒரே இரத்தக்காடாக முனகலும் மரணக் கூச்சலும், நிறைந்திருந்த அந்த இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை