பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

69


பிடித்து 10 நிமிடத்துக்கு மேல் நின்று கொண்டு இருந்தேன். இரவு மணி 7ஆயிற்று. வெளிச்சம் மங்கி இருள் பரவிற்று. பனங்காடு, ‘சலசல’ என்ற சத்தம், மரத்தினுடன் மரங்கள் உராயும் போது ஏற்பட்ட பயங்கரமான ‘கீரிச், கீரிச்’ என்ற ஒருவித அச்சமூட்டும் சத்தம். இந்நிலையில் நரியின் ஊளை வேறு, சுற்றிலும் இறந்து கிடந்த தேச பக்த தியாகிகளைப் பார்த்து ஒரு முறை அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டுநகர்ந்தேன்.

இருட்டில் மேடு பள்ளம் முள் கல் இவைகளில் தட்டுத் தடுமாறி நடந்தோம். காலெல்லாம் கிழிசல் ஏற்பட்டு ரத்தம் வடிந்து கொண்டே வந்தது. கையில் குண்டு பாய்ந்த இடத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சுமார் நான்கு மைல் வந்ததும் தலை சுற்றியது. மயக்கமாக வந்தது. அதே இடத்தில் கீழே தடால் என்று மயக்கமாக விழுந்து படுத்து விட்டேன். என் நண்பரும் மயங்கிப் படுத்து விட்டார். மயங்கிய நிலையில் நன்றாகத் தூங்கி விட்டோம்.

துங்கிக் கொண்டிருந்த எங்களை சிலர் தட்டி எழுப்பினார்கள். சுமார் 10 பேர் நின்று கொண்டிருந்தார்கள். போலீசார் என்று நினைத்து விட்டோம். ஆனால் அவர்கள் போலீசார் அல்ல. அதற்கு முன் தினம் இறந்து போன உறவினர் ஒருவருக்குப் பால் ஊற்றி அஸ்தி எடுத்துப் போக வந்திருக்கிறார்கள் அது சரி அவர்கள் ஏன் நாங்கள் படுத்திருந்த இடத்திற்கு வந்தார்கள்? எதற்காக எங்களை எழுப்பினார்கள்?

சொன்னால் நம்பமாட்டீர்கள், நாங்கள் அவர்கள் உறவினரைப் புதைத்திருந்த இடத்திற்கு மேல்தான் அவ்வளவு நேரம் அந்த இரவு முழுதும் படுத்திருந்தோம். இதை அறிந்ததும் எங்கள் மனோநிலை எப்படி இருந்திருக்கும்?