பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

73


அது அசைவ உணவு விடுதி. பரோட்டா, கோழி குருமா, மீன் வறுவல் என்று பலவகையான உணவு வகைகளை இருவரும் ஒரு ‘பிடி பிடித்தோம்’ பில் வந்தது. ரூபாய் அறுபது. அசந்து விட்டோம். இது வரையில் இம்மாதிரி ஓட்டலில் நாங்கள் சாப்பிட்டதுமில்லை. இவ்வளவு ரூபாய்க்கு பில் கொடுத்ததுமில்லை.

எங்கள் கைவசமோ ரூபாய் அதிகமில்லை. இப்போது அறுபது ரூபாய் கொடுத்து விட்டால் என்ன செய்வது என்று நாங்கள் இருவரும் தமிழில் பேசிக் கொண்டோம்.

எங்களுக்கு உணவு பரிமாறி பில் கொடுத்த சர்வர் எங்களை ஆச்சரியமாகப் பார்த்து “ஏன் சார் நீங்கள் தமிழ்நாடா? என்று தமிழில் கேட்டான்.

“ஆமாம் நாங்கள் தமிழ்நாடுதான், ராமநாதபுரம் ஜில்லா” என்றோம். உடனே அவன் நான் கூட ராமநாதபுரம் ஜில்லாகாரன்தான் சார் என் ஊர் சிவகங்கைக்குப் பக்கத்திலுள்ள பார்த்திபனூர்” என்றான்.

“அடடே அப்படியா சங்கதி. ரொம்ப நெருங்கி வந்து விட்டாயே, இங்கே வந்து எவ்வளவு காலமாச்சு?” என்று கேட்டேன். ‘பத்து வருஷமாச்சு, நம்ம ஊரை எல்லாம் பார்க்க வேண்டுமென்ற ஆசை வரவர அதிமாகிக்கொண்டு வருகிறது” என்று சொன்னவன், தன் குரலைத் தாழ்த்தி, “ஏன் சார், திருவாடானைப் பகுதியில் பெரிய புரட்சியாமே. இங்கிலீஷ் கவர்மெண்டே போச்சாமே, ஜெயிலை உடைத்து காங்கிரஸ் தலைவர்களை ஜனங்கள் விடுதலை செய்து விட்டார்களாமே, நம்ம ஊர் ஆளுங்க செய்யக் கூடியவங்கதான் சார். வீர மறவர் நிறைஞ்ச ஊரில்ல” என்று அடுக்கிக் கொண்டே போனான். நாங்கள் அவனைத்தடுத்து, நீயும் காங்கிரஸ்காரன்தானா?” என்று கேட்டோம்.