பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராஜாஜியின் ஆசி

எனக்கு மிகவும் பிடித்தமானவர்களின் சின்ன அண்ணாமலை முக்கியமானவர். தெய்வபக்தியும், தேசபக்தியும் தமிழ்ப் பக்தியும் நிறைந்தவர். இவருடைய வாழ்க்கை வீரம் நிறைந்தது. காந்தீய வழியில் தொண்டு செய்யும் உள்ளம் கொண்டவர்.

பெரிய விஷயங்களை எளிய முறையில் நகைச் சுவையாகச் சொல்லும் திறன் படைத்தவர். சிறைச்சாலையில் கூட இவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் மிகவும் ஆவேசமாகப் பேசுவார்; செயல்படுவார். அதனால் இவரை நான் உற்சாக எரிமலை என்று பாராட்டிப் பேசியிருக்கிறேன். இவருடைய குணம் விசேஷ மானது.

இவர் மற்றவர்களுக்காகவே உழைப்பவர். தனக்கென்று எதுவும் செய்து கொள்ளமாட்டார். இதுவரையில் என்னிடம் இவர் தனக்கென்று எதையும் கேட்டது கிடையாது. தமிழுக்கு நிறையத் தொண்டு செய்திருக்கிறார்.

தமிழ்ப் பண்ணை என்ற புத்தகப் பிரசுரம் மூலம் பல நல்ல நூல்களை வெளியிட்டிருக்கிறார். மிக அழகாக அதிகச் செலவில்-லாபம் கருதாமல் வெளியிட்டிருக்கிறார். என்னுடைய நூல்களை வெளியிட்டு அதற்கு ஒரு மகத்துவம் ஏற்படுத்தி யிருக்கிறார். எனது பிரியமுள்ள சின்ன அண்ணாமலை அவர்களுக்கு எனது ஆசி.

சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி
“கண்டிறியாதன கண்டேன்"
புத்தக வெளியீட்டு விழாவில்
ராஜாஜி அவர்கள் பேசியது