பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

சொன்னால் நம்பமாட்டீர்கள்


யாரும் அங்கு இல்லை. அதனால் அவர்களுக்கு நான் உள்ளே இருப்பது தெரிந்திருக்காது.

என்னைக் கூர்ந்து கவனித்த கான்ஸ்டெபிள் “டேய் நீ வந்துட்டியா” என்று “தூய தமிழில்” சில வசைமாரி வார்த்தைகள் பொழிந்து, “நீ வரும் சமயம் நான் இல்லாமல் போனேன். இருந்திருந்தால் இதோ இவனுக்குச்செய்த பூஜை, நெய்வேதியம், தீபாராதனை உனக்கும் நடத்தி உள்ளே தள்ளியிருப்போம். இருக்கட்டும், எங்கே போய்விடப் போகிறாய்; காலை விடிந்ததும்,

வெளியில்தானே வரவேண்டும் அப்போது எலும்பை எண்ணிக் கையில் கொடுத்து விடுகிறேன். போலீஸ்காரனை நீ எவ்வளவு திட்டு திட்டினாய்; உன் நாக்கை அறுக்காமல் விடமாட்டோம்” என்று ஆவேசமாகப் பேசிவிட்டு அந்தப் போலீஸ் கான்ஸ்டெபிள் வேகமாகச் சென்றுவிட்டார்.

அவர் பேசியது எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு கொடூரமாக நேருக்கு நேர் பேசியதை நான் கேட்டதில்லை. விடிந்ததும் பலமான அடி காத்திருக்கிறது என்ற நினைப்பில் மனம் சுற்றி வட்டமிட்ட வண்ணம் இருந்தது.

எதிரில் அடிபட்டு விழுந்து கிடந்த அந்த அப்பாவி தியாகியின் இரத்தத்தைத் துடைத்து அவனுக்கு ஆறுதல் சொன்னேன். அவனுக்கு விழுந்த அடிகளைத் திருப்பித்திருப்பிப் பார்க்கும்போது இம்மாதிரி அடிவாங்க நாமும் தயாராக வேண்டியதுதான் என்று நானும் என் மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்.

நெஞ்சில் ஒருகலக்கம் இருந்து கொண்டே இருந்தது. இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்ததைத் தவிர ஒரு நிமிடம் கூட கண் அயர முடியவில்லை.