பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

83



ஒவ்வொரு மணிக்கும் போலீஸ் ஸ்டேஷனில் மணி அடிப்பார்கள். காலை மணி 4 அடிக்கும் சத்தம் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன். இன்னும் 2 மணி நேரத்தில் சிறைக்கதவு திறக்கப்படும். போலீஸ்காரர்கள் கற்றி நின்று கொள்வார்கள், கொடு இவனுக்கு சுயராச்சியம் என்பார்கள்.

சரமாரியாக உதை விழும். பூட்ஸ் காலால் மிதிப்பார்கள். இம்மாதிரி இக்கட்டான சந்தர்ப்பங்களில் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதைவிட வேறு வழி மனிதனுக்கு ஏது?

நானும் சில பிரார்த்தனைப் பாடல்களை ஆண்டவன்பால் லேசாகப் பாட ஆரம்பித்தேன். சிறு வயதில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் முதலிய பக்திப் பாடல்களை எனது தந்தையார் ஆசிரியர் வைத்து படிப்பித்திருக்கிறார். அதனால் எனக்குப் பல பக்திப் பாடல்கள் மனப்பாடம். ஆகவே தெரிந்த பாடல்கள் அனைத்தையும் பாடிக்கொண்டேயிருந்தேன்.

மெதுவாகப்பாடினால் இறைவன் கனதில் விழுமோ விழாதோ என்று சிறிது உரக்கவே பாடினேன்.

“யாரடா அவன் கழுதை போல்கத்துவது” என்று ஒரு இடி முழக்கம் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் இருந்து கேட்டது. உடனே மற்றொரு குரல் மெதுவாக, “மரியாதையாகச் சொல்லுடா. பாடுவது யார்தெரியுமா?” என்று முதல் குரலை அடக்கியது. யாரது என்று முதல் குரல் கேட்டது.

“வருடா வருடம் தீபாவளி அன்று முள்ளிக் குண்டு தோட்டத்திற்குச் சென்று வேஷ்டி, புடவை சாப்பாடு பொட்டலம் வாங்கிக் கொண்டு வருவாயே ஞாபகம் இருக்கிறதா?” என்று இரண்டாவது குரல் சொன்னது.

“ஆம், அதற்கும், இவனுக்கும் என்ன சம்பந்தம்” என்று முதல் குரல் அதட்டியது.