பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ப்பண்ணை

சென்னைக்கு வந்துவிட்டேன். ‘என்ன செய்வது’ என்று திகைத்திருக்கையில் திரு. ஏ. கே.செட்டியார் அவர்கள் என்னைத் தன் வீட்டில் கூட்டிக் கொண்டு போய் வைத்துக் கொண்டார்.

திரு. ஏ. கே. செட்டியார் அவர்கள் ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்று புகழ் பெற்றவர், பிரயாணக்கட்டுரைகளை மிகவும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். ‘குமரி மலர்’ என்ற அற்புதமான மாத இதழ் நடத்திக் கொண்டிருந்தார்.

அவருடன் கூடவே அவர் செல்லுமிடமெல்லாம் கூட்டிச் சென்று என்னை அறிமுகம் செய்து வைப்பார். அடிக்கடி சக்தி காரியாலயத்திற்குச் செல்வோம். சக்தி வை. கோவிந்தன் அவர்கள் எனக்கு ஏற்கனவே பழக்கமானவர். தமிழ்ப் புத்தகங்களை அழகிய முறையில் போடுவதற்கு முன்னோடி அவர்தான். ஏராளமான தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டவர். திரு. ஏ. கே. செட்டியார். சக்தி வை. கோவிந்தன் இவர்களுடன் எப்பொழுதும் கூட இருக்கும் நண்பர் சத்ருக்கனன் அச்சுத் தொழிலில் பெரிய திறமைசாலி. இந்த மூவரும் இணை பிரியாத நண்பர்கள், இவர்கள் மூவரும் ஏனோ என்னிடம் மிகுந்த பாசம் காட்டினார்கள். தங்களின் ‘செல்லப்பிள்ளை’யாக என்னைக் கட்டிக் காத்தார்கள்.

இவர்கள் அடிக்கடி போகும் இடம் தியாகராய நகரில் உஸ்மான் ரோடில் இருந்த திரு. வெ. சாமிநாத சர்மா அவர்களின்