பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

93


இல்லத்திற்குத்தான்! இவர்களுடன் நானும் செல்வேன். ஒரு நாள் நாங்கள் பஸ்ஸில் திரு. சாமிநாதசர்மா அவர்களின் இல்லத்திற்குப் போகும்போது தியாகராய நகர் பனகல்பார்க் நாகேஸ்வரராவ் தெருவில் ஒரு சிறு அழகிய கட்டிடம் பூட்டிக் கிடந்தது. அதைப் பார்த்த மூவரும் என்னைக் கூட்டிக் கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினார்கள்.

அந்தக் கட்டிடம் காலியாக இருப்பதை விசாரித்து தெரிந்துகொண்டு, இதில் நம் அண்ணாமலைக்கு ‘தமிழ்ப் பண்ணை புத்தக நிலையம்’ வைத்துக் கொடுக்கலாம் என்று அவர்களுக்குள் பேசி முடிவு செய்தார்கள். என்னிடம் விஷயத்தைச் சொன்னபோது, நான், “என்னிடம் போதியபணம் இல்லையே, என்ன செய்வது?” என்று கையைப் பிசைந்தேன்.

அவர்கள் மூவரும் சிரித்துவிட்டு “நாங்கள் உனக்கு வேண்டிய உதவி செய்கிறோம் தைரியமாகத் தொழிலை ஆரம்பி” என்றார்கள்.

இடத்தைப் பிடித்துக் கொடுத்தார்கள். பல புத்தகக் கம்பெனிகளில் புத்தகங்களை ஏராளமாக வாங்கிக் கொடுத்தார்கள். புத்தகம் போட பேப்பர் தந்தார்கள். அடடா அவர்கள் செய்த உதவியை நினைத்தால் இப்பொழுதுகூட என் மெய்சிலிர்க்கிறது.

‘தமிழ்ப்பண்ணை'யை ராஜாஜி துவக்கி வைத்தார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை விளக்கேற்றி வைத்தார். சக்தி வை. கோவிந்தன் புதுக்கணக்கு எழுதினார்.

எழுத்தாளர்கள் அனைவரும் விழாவிற்கு வந்தனர்.

தமிழ்ப்பண்ணையின் முதல் புத்தகமான ‘தமிழன் இதயம்’ என்ற நூலைப் பார்த்து அனைவரும் பிரமிப்படைந்தனர்.