பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1954.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தும் எந்தக் காலத்திலும் இருக்கத்தானே செய்கிறது...... நமது புத்தியில் தெளிவு வேண்டும். அதுதானே முக்கியம்......

பூங்காவனம்: ஆமாம்......ஆனால் சொக்கி விடுகிறார்கள் இசையில். சொல்வதையெல்லாம் நம்பிவிடுகிறார்கள்.

(பேசிக்கொண்டே இருவரும் வேழ நாட்டு ராஜ வீதியை அடைகிறார்கள்; அங்கே...)

பூங்காவனம்: தெரிகிறதா...ஐயனே!

கவிராயர்: யார் அப்பா—இளவரசன் போல?

பூங்காவனம்: இளவரசனல்ல—இசை அரசன் மதிவாணன்.

கவிராயர்: அவனா...?

பூங்காவனம்: அரசர் அவனுக்கு தர்பார் உடை அணியும் அந்தஸ்து அளித்திருக்கிறார்.

(சோலை நாட்டு அரண்மனை உட்புறம்...தனி அறை–சுவற்றிலே மயில் கொடிச் சின்னம்—ஓலைகளைப் பிரித்துக் கொடுத்தபடி இருக்கிறாள், ஒரு பணிப்பெண்— அழகிய தோற்றமும் அறிவு ஒளி வீசும் கண்களும் கொண்ட அரசி குமார தேவி ஓலைகளைப் பார்த்தபடி,)

குமார தேவி: செந்தாமரை இந்த ஆண்டு கலை விழா அதிக சிறப்பாக இருக்கும். இதோ பார்த்தாயா? இது தொண்டை நாட்டுக் கலா வாணர் ஓலை! இது......அடடே...வேழ நாடு! வேழ நாட்டிலே கூடவா கலை......!

செந்தாமரை: அதென்ன தேவி! அப்படிச் சொல்லுகிறீர்கள்!

குமாரி: வேழ நாட்டு வேந்தன் வெற்றி வேலன் மண்ணாசை பிடித்தவன். அவன் கலையை எப்படி வளர்க்க முடியும்? என்ன அதிசயமோ —தெரியவில்லை! வேழ நாட்டிலிருந்து மதிவாணன் என்ற கலைஞன், வருகிறானாம்!

செந்தா: பலர், ஏற்கனவே வந்து விட்டார்கள். தேவி. கலை விழாவுக்கான ஏற்பாடே, கண் கொள்ளாக் காட்சியாக விருக்கிறது.

குமாரி: கள்ளீ! பார்த்து விட்டு வந்து விட்டாயா. நீ மட்டும்.

செங்: ஆமாம். தேவி! தாங்கள் பாசறையைப் பார்வையிடப் போனீர்களே!