பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரும்பு நான்கு ஆண்டுகளில் போதாகி ஏழுமலையான் திருவருளால் 1964-ஆகஸ்டில் மலரத் தொடங்கியது. திருவேங் கடவன் பல்கலைக் கழகம் வட மொழித்துறையில் பதிவு செய்து கொள்ள இசைவு வழங்கியது. பக்தி இலக்கியத்தின் கொடு முடியாகத் திகழும் 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்’ என் மனக்கண்முன் நின்றது. 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வாரின் தத்துவம் என்ற தலைப்பை ஆய்பொருளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு என் ஆய்வினைத் தொடங்கி 1969இல் பிஎச். டி. பட்டமும் பெற்றேன். 'புண்ணியமும் புருஷார்த்தமும் ஒருசேர என்னை வந்தடைந்தன. திருப்பதி வந்ததும், தமிழக அரசின் மானியம் பெற்றுத் தமிழை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் என்பால் முகிழ்க்கத் தொடங்கியது. அப்பொழுது சென்னைஅரசு கல்வி - நிதி அமைச்சராக இருந்தவர் திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள். அவர் திருப்பதி வந்தபோது (1961-இல்) என் எண்ணத்தை அவரிடம் வெளியிட்டேன். நிதியை உடனே அளிக்க ஒருப்பட்டார் அப்பெருமகனார். சில சூழ்நிலைகளால்’ திருப்பதிப் பல்கலைக்கழகம் மானியத்தை ஏற்க ஒப்பவில்லை. என்னையும் மறந்து என் குடும்பத்தையும் (ஆறு ஆண்டுகள்) துறந்து அறிவியல் நூல்களை எழுதுவதிலும் பிஎச்.டி. ஆய்விலும் ஈடுபட்டேன். அறிவியலில் பல துறை அறிவினைப் பெற பலர், குறிப்பாக விலங்கியல் துறையைச் சார்ந்த திரு. ரங்கராவ், திரு. சீநிவாசலு என்போர் உற்றுழி உதவினர். ஏற்கெனவே அறிவியலில் ஆழங்கால் பட்டிருந்த எனக்கு மீன் குஞ்சினை நீரில் விட்டது போலாயிற்று. என் அறிவுப்பசிக்கேற்ற உணவு தொடர்ந்து கிடைத்தவண்ணம் இருந்தது. இக்காலத்தில் ஆறு - அறிவியல் நுால்களை எழுதிமுடித்தேன். வெளிவந்ததில் தாமதம் ஏற்பட்டதால் எழுதும் உற்சாகம் குறையத் தொடங்கியது. 1968இல் நான் பிஎச்.டி. பட்டம் பெற்றதும் 'பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டலின் திருவருளால் தமிழ் வளர்ச்சிக்காக யான் மேற்கொண்ட முயற்சி பலன் அளித்தது. ஏறக்குறையப் பத்தாண்டுகள் சென்னைப் பயணமும், ஏறக் குறைய இக்காலத்தில் 100 நாள்கள் விடுப்பும், சில ஆயிர ரூபாய் சொந்தப் பொறுப்பில் ஏற்ற செலவும், தலைமைச் செயலகத்தில் யான் வட்டமிட்டதும் 'கண் மூடி மெளனி'யாக நிற்கும் ஏழுமலையான் திருவுள்ளத்தைக் கவர்ந்திருக்க வேண்டும். viii