பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் பாற்கடல் கடையப்பெற்றபொழுது எத்தனையோ பொருள்கள் தோன்றின. பெரிய பிராட்டியும், துளசி தேவியும் அவற்றுடன் தோன்றியவர்கள். பாற்கடல் நாதன் பிராட்டியைத் தன் திருமார்பில் தரித்துக் கொண்டான். துளசிதேவி தனக்கும் அங்ங்னமே இடம் ஒதுக்குமாறு வேண்டுகின்றாள். 'இலக்குமி பன்னெடுங்காலமாகத் தவமியற்றியதன் பயனாக அவ்விடத் தைப் பெற்றாள்; நீ மார்க்கண்டேயர் தவம் புரியும் வனத்தில் துளசிச் செடி உருவில் தங்கியிருப்பாய். அப்பொழுது உனக்கும் நல்ல காலம் கிட்டும்” என்கின்றான் பாற்கடலுள் பையத் துயின்ற பரமன். துளசி தேவியும் அங்ங்னமே கங்கையிற் புனிதமான காவிரியின் தென்புறத்தில், குடமூக்கிற்கு அருகில், கீழ்த்திசையில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு துளசிச் செடியுருக்கொண்டு வாழ்ந்து வருகின்றாள். இதே சமயத்தில் தவத்தில் மேம்பட்டு நின்ற மிருகண்டுவின் புதல்வராகிய மார்க்கண்டேயர் சிரஞ்சீவித்வம் பெற்ற பிறகு திருத்தலப் பயணத்தை மேற்கொண்டு பல தீர்த்தங்களில் நீராடிப் பரமபதநாதனைச் சேவித்துக் கொண்டு துளசிதேவி வதியும் காட்டிற்கு வந்து சேர்கின்றார். இவ்வனம் இயற்கை எழில் நிரம்பப்பெற்றதாயும் தனிமையில் நின்று தவம் இயற்றுவதற்கு ஏற்றதாயும் இருப்பதைக் கண்டு இவ்விடத்தைத் தாம் தவம் புரியும் இடமாகத் தேர்ந்தெடுக்கின்றார். பூ தேவியைத் தம் திருமகளாகப் பெற்று இத்தலத்து எம்பெருமானை மணவாளப் பிள்ளையாகப் பெறல் வேண்டும் என்பது இவர்தம் பேரவா. இவ் வவாவை நிறைவேற்றுவதன் பொருட்டுக் கடுந்தவம் புரியத் தொடங்குகின்றார். இத்திருத்தலத்தில் தங்கித் திருக்கோயிலின் அருகிலுள்ள திருக்குளத்தில் முப்போதும் தீர்த்தமாடிக் காய், கனி, கிழங்கு இவற்றையே உணவாகக் கொண்டு ஒரு திருத்துழாய்ச் செடியருகில் அமர்ந்து தவம் இயற்றி வருகின்றார்.