பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி உற்சவமாகும். நம்மாழ்வார் என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் என்ற ஐவரையும் மேலே குறிப்பிட்ட பாசுரத்தால் மங்களா சாசனம் செய்துள்ளதாகக் கண்டோமன்றோ? சந்நிதியின் உட்கட்டடத் திற்கு வெளியே வடபுறத்தில் புஷ்கரிணிக்கு எதிரே தனியாக என்னப்பன் சந்நிதியும், தென்புறத்தில் நந்தவனத்துக்குள் மணியப்பன் சந்நிதியும் உள்ளன. இவர்களையெல்லாம் சேவித்தபின் மற்ற சந்நிதிகட்கும் செல்லலாம். வேதாந்த தேசிகன் சந்நிதி ஆலயதிற்குள் கருவறைக்கு வெளியே மிக அருகில் அமைந்துள்ளது. உட்சுற்றில் வலம் வருங்கால்வெளி மண்டபத்தில் வடபுறத்தில் ஆழ்வார்கள் சந்நிதியும், அடுத்துக் கண்ணன் சந்நிதியும், அதற்குக் கிழக்கே இராமர் சந்நிதியும் உள்ளன. உட்கட்டடத்திற்கு வெளியே கருவறையை நோக்கிய கருடன் சந்நிதியும் வீதியிலிருந்து ஆலயத்தினுள் புகும்போது முதலில் வணங்குவதற்குப் பாங்காக ஒரு சிறிய கண்ணன் சந்நிதியும் உள்ளன. இங்கு தேசிகனுக்கு மிக முக்கியத்துவம் உண்டு. பெருமாளும் பெருமாட்டியும் கண்டருளும் எல்லா உற்சவங்களிலும் பெரும்பாலும் தேசிகனும் உடன் எழுந்தருள்வது நெடுநாளைய வழக்கமாக இருந்து வருகின்றது. இந்தச் சந்நிதி வடகலை வைணவ சம்பிரதாயத்தைச் சார்ந்தது. வைகானச ஆகமமுறைப்படி வழிபாடுகளும் சிறப்பான உற்சவங்களும் நடைபெற்று வருகின்றன. திருவிண்ணகரப்பன் காவிரி தீரத்தை நாடி வந்தமையால் இவனைத் தேடி கங்கை, யமுனை, கோதாவரி என்ற மூன்று நதிகளும் ஓடி வந்துள்ளன. கோவிலுக்குத் தெற்கே ஒடும் நட்டாறே தட்சிண கங்கை. அதற்கும் தெற்கே ஒடும் கீர்த்திமானாறே தட்சிண கோதாவரி. அதற்கும் தெற்கே ஓடுவது தட்சிண யமுனை. இது 'அரி சொல்லாறு’ (அரிசிலாறு) என்று வழங்கப்பெறுகின்றது. இச்செய்திகளையெல்லாம் அறிந்த நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வருகின்றது. கையும் உரையும் கருத்தும்உனக் கேஅடிமை செய்யும் படிநீ திருத்தினாய் - ஐயா திருவிண் ணகராளா சிந்தையினும் எண்ணேன் பெருவிண் ணகராளும் பேறு." 5. நூற். திருப். அந். 16.