பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இது. 'திக்கற்றவருக்குத் தெய்வமே துணை' என்றிருந்தேன். தெய்வம் துணைநின்றது, ரீடர் பதவியும் வந்தது. ஓய்வுபெறும் ஆண்டில் (1977) பேராசிரியர் பதவியும் வந்தது. வாணலியில் வறுபடும் பொருளைப்போல் துன்புற்றேன். திருப்பதியில் யான் ஆற்றிய 'தமிழ்ப் பணியைத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும். ஆறு ஆண்டுகளில் 'மூன்று டாக்டர்களை உண்டாக்கி னேன்; நான்கு எம்.ஃபில்களைத் தோன்றச் செய்தேன். ஏழு மலையான் என்னைக் கசக்கிப் பிழிந்தான். உழைப்புக்கு அஞ்சாதவனை ஆண்டவனாலும் ஒன்றும் செய்யமுடியாது. ஊழையும் உப்பக்கம் காண்பவரல்லவா உழைப்பாளிகள்? நிற்க. பிஎச். டிக்குப் பதிவு செய்து கொண்ட அன்றே ஆழ்வார் பெருமக்கள் மங்களாசாசனம் செய்த 108 திவ்விய தேசங் களையும் சேவிக்க வேண்டுமென்ற அவா முகிழ்த்தது என் உள்ளத்தில். அப்போது காரைக்குடியில் மூன்றாவது படிவம் படித்து வந்த என் இளையமகன் (1980-ஜூன் முதல் என்புருக்கி நோய் ஆய்வு மருத்துவ மனையில் ஆய்வு ஆஃபீசராகப் பணியாற்றும் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்,M.D.) என்னுடன் வர, சோழநாட்டுத் திவ்விய தேச யாத்திரை 1965 செப்டம்பரில் தொடங்கியது. சோழ நாட்டில் திருவரங்கம், உறையூர், உத்தமர் கோவில் (கரம்பனூர்) திருவெள்ளறை, அன்பில், திருப்பேர் நகர் (கோயிலடி) என்ற ஆறு திவ்விய தேசங்களையும் கட்டுரை (1-6), பாண்டி நாட்டில் திருக்கோட்டியூர், திருமெய்யம், திருப் புல்லாணி, திருக்கூடல் (மதுரை), திருமோகூர், திருமாலிருஞ் சோலை, சீவில்லிபுத்துர், திருத்தண்கால் ஆகிய திவ்விய தேசங் களையும் சேவிக்கும் பேறு பெற்றேன். மீண்டும் 1968-ஜூன் திங்கள் என் துணைவி, மூத்த மகன் எஸ். இராமலிங்கம், M.Sc., (இப்பொழுது பாரத் ஓவர்சிஸ் வங்கி தலைமை அலுவலகத்தில் ஆஃபீசராக இருப்பவன்) இளைய மகன் என்னுடன் வர சோழ நாட்டுத் திருப்பதிகளில் திருவாரூரில் தங்கி திருக்கண்ணங்குடி, திரு நாகை, திருக்கண்ண மங்கை என்ற மூன்று திருத்தலங் களையும் (கட்டுரை 18-20), திருக்குடந்தையில் தங்கி திருக் குடந்தை, திருவிண்ணகர், நந்திபுர விண்ணகரம், திருநறையூர், திருச்சேறை, திருவெள்ளியங்குடி, புள்ளம்பூதங்குடி, ஆதனுர், கபித்தலம் என்ற ஒன்பது திருத்தலங்களையும் (கட்டுரை 9-17), தஞ்சையில் தங்கி திருத்தஞ்சை, திருக்கண்டியூர் என்ற இரண்டு திருத்தலங்களையும் (7,8) சேவித்தேன். X