பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நறையூர் நின்ற நம்பி 105 வாராமையால் வெள்.கி ஒதுங்கிப் போகும் (6.5:5); சில அன்னப் பறவைகள் நெய்தற் பூவிலுள்ள மதுவைப் பருகித் தாமரைப் பூவைப் படுக்கையாகக் கொண்டு அதிலே போய்ப் படுத்துறங்கும் (6.5:6); மெல்லிய பூக்களின்மீதுள்ள வண்டுகள் களித்துத் தேனைப் பருகி நிற்கும்; அழகிய தென்றல் மலர்களை வீசி இறைக்கும்; முல்லை மலர்கள் முறு வலிப்பன போன்று மலரும் (6.7:4). 'பள்ளி கமலத் திடைப்பட்ட பகுவாய் அலவன் முகம்நோக்கி, நள்ளி ஊடும் வயல் (6.7:6); (பள்ளி - படுக்கை, கமலம் - தாமரை; பகுவாய் - பெரிய வாய்; அலவன்ஆண் நண்டு; நள்ளி - பெண் நண்டு; ஊடும் - பிணங்கும்) தாமரைப் பூவில் பாயல் கொண்டிருந்த ஆண் நண்டின் முகத்தைப் பார்த்துப் பெண் நண்டு பிணங்கும். இதன் ஆழ் பொருளைப் பராசர பட்டர் அழகாக உரைத்தருள்வாராம். ஒர் ஆம்பல் மலரில் நண்டு தம்பதிகள் இனிது வாழ்கின்றன. ஒரு நாள் ஆண் நண்டு (அலவன்) கருக்கொண்டுள்ள தன் பேடைக்கு (நள்ளி) இனிய பொருள்களைக் கொண்டுவந்து தரவேண்டு மென்று ஆசைப்பட்டது. தாமரைப் பூவிலிருந்து மகரந்தத்தைத் திரட்டிக் கொணர்ந்து கொடுக்க நினைந்து மெல்ல நகர்ந்து தாமரைப் பூவை அடைந்தது; அப்போது சூரியன் மறையவே, அத்தாமரை மலர் மூடிக்கொள்ள அதனுள்ளே அகப்பட்டுக் கொண்டது. தாமரையை மலர்த்தி எப்படியாவது வெளிக் கிளம்ப முயன்றும் இயலவில்லை. அடுத்த நாள் சூரியன் தோன்றும் வரையில் காத்திருக்க வேண்டியதாயிற்று. இரவெல்லாம் மலரினுள் புரண்டு பொழுது விடிந்ததும் வெளிப் போந்தது. தாதும் கண்ணமும் உடலில் ஒட்டிய நிலையில் தன் மனைக்கு விரைந்து வந்து சேர்ந்தது. பகற் பொழுதில் ஆம்பல் மலர் மூடிக் கொள்ளுமாதலால் ஆண் நண்டு அங்கு வந்து சேரும் சமயமும், பெண் நண்டு கிடக்கும் ஆம்பல் மலர் மூடிக் கொள்ளும் சமயமும் ஒன்றாக இருந்தது. இதனைப் பார்த்தால், ஆண் இரவில் வேறிடத்தில் தங்கி வந்தபடியாலும், உடம்பில் சுவடு இருந்தபடியாலும் ஊடல் கொண்டு கதவை அடைத்துக் கொண்டது என்று எண்ணும்படியாக இருந்ததாம். ஒரு புறத்தில் மலர்ந்த தாமரை மலர்களும் மற்றொரு புறத்தில் கூம்பியிருக்கும் ஆம்பல் மலர்களும் விளங்கப் பெற்ற வயலைச் சொன்னவாறு