பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏற்கெனவே, மலை நாட்டுத் திருப்பதிகள் (1971,) தொண்டை நாட்டுத் திருப்பதிகள் (1973), வடநாட்டுத் திருப்பதிகள் (1980) என்ற நான்கு நூல்கள் வெளி வந்துள்ளன. இந்த நூல் சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி ஆகும். இருபது திருப்பதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இவை பற்றிய கட்டுரைகளில் ஆழ்வார் பெருமக்களின் பக்தியுணர்ச்சியின் கொடுமுடிகளைக் காணலாம். பாசுரங்களின் சொல்வளம் வியாக்கியாதாக்கள் பாசுரங்களில் ஆழங்கால் பட்ட பாங்கு, என் சிறிய உள்ளம் பாசுரங்களை அநுபவித்த முறை ஆகியவற்றைக் கண்டு மகிழலாம். சென்னை உயர்நீதி மன்றத்து நீதிபதி திரு. ஜி. இராமா நுஜம் திருச்சி புனித சூசையப்பர் கல்லுாரியில் என் ஒரு சாலை மாணாக்கர். நாங்கள் பயின்ற காலத்தில் ஒரே விடுதியில் தங்கியிருந்தோம். நெருங்கியும் பழகினோம். திரு. இராமாநுஜம் எவரிடமும் இனிமையாகப் பழகுபவர்; அதிகம் பேசாதவர். மாணாக்கர் வாழ்விலேயே பெருமித தோரணையும் அடக்க நடையும் (Reserved type) உள்ளவர். இறையறாத தெய்வ பக்தியுள்ளவர்; குடிவழியாக வைணவ குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் குடும்பம் சீவில்லிப்புத்தூருக்கருகிலுள்ள மூன்று சிற்றுார் களில் மூன்று திருமால் திருக்கோயில்களைக் கண் காணித்து வருகின்றது. இருபத்திரண்டு ஆண்டுகள் (1947-69) சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றியவர். இவரி டம் இயல்பாகவே அமைந்துள்ள நேர்மை, ஒழுங்கு, அடக்கம், பெருமித தோரணை, எளிமை முதலிய நற்குணங்களையும் வழக் குரைஞர் தொழிலும் இத்தகைய நற்பண்புகளையும் மிகுதிறமை யையும் கண்டு மைய அரசு நேரடியாகச் சென்னை உயர்நீதி மன்றத்து நீதிபதியாக நியமனம் செய்தது. 1969 தொடங்கி இன்று வரை நேரிய முறையில் சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்' அமைந்து சான்றாண்மை குன்றாது பணியாற்றி வருவதை இந்திய மக்கள் நன்கு அறிவர். இத்தகைய என் கெழுதகை நண்பர் இந்நூலுக்கு அணிந்துரை நல்கி நூலைச் சிறப்பித் தமைக்கு என் இதயம் கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். சிரீவரமங்கலம் என வழங்கும் நாங்குநேரியில் திருக் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமான் தோத்தாத்திரிநாதன். xi