பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி விருப்புத் தெய்வமான இராசகோபாலனின் கைங்கரியமே இங்கும் சிறு அளவில் நடைபெறுவதாகக் கூறி மன்னனின் ஐயுறவைப் போக்கிவிடுகின்றான். மன்னனும் மகிழ்ச்சியுற்று அந்தத் திருக்கோயில் கட்டும் செலவு முழுவதையுமே கொடுத்துத் திருப்பணியை நிறைவு செய்து விடுகின்றான். இத்தகைய ஒரு முறையைக் கையாண்டு திருச்சேறை எம்பெருமான் திருக்கோயிலின் திருப்பணி நிறைவு பெறு கின்றது. இங்கு அமைச்சனின் திருப்பணியைத் தடுக்க வந்த அரசனை உற்சாகப்படுத்தித் திருப்பணியை முற்றுவிக்கக் கருவியாக உதவியிருக்கிறான் இராசகோபாலன். இந்த வரலாற்றை அறிந்த வண்ணம் நாச்சியார் கோயிலினின்றும் திருச்சேறை என்ற திவ்விய தேசத்திற்கு வருகின்றோம். இத்திருத்தலம் குடந்தைக்குக் தென் கிழக்கில் திருக்குடந்தை-திருவாரூர் நெடுஞ்சாலையில் கும்பகோணத்தி லிருந்து 12 கிலோ மீட்டர் தொலையில் உள்ளது. கும்பகோணத் திலிருந்து பேருந்து வசதி உள்ளது. நாச்சியார் கோயிலில் இந்தப் பேருந்தைப் பிடித்துதான் வருகின்றோம். திருக்கோயிலுக்கு அருகில் இறங்கிக்கோயிலை நோக்கி நடக்கின்றோம். முதலில் நாம் கோயிலுக்கு முன்புறத்தில் காண்பது ஒரு பெரிய தெப்பகுளம். இது சாரபுஷ்கரிணி என்று வழங்கப்பெறுகின்றது. இதில் நல்ல விசாலமான படிக்கட்டுகள் கட்டிவைக்கப் பெற்றுள்ளன. தெளிவான நீரும் நிரப்பி வைக்கப்பெற்றுள்ளது. திருக்கோயிலுக்கு வடக்கில் முடிகொண்டான் என்ற ஆறும். தெற்கே குடமுருட்டி என்ற ஆறும் ஒடும்போது திருக்குளத்தில் தெளிவான நீர் இருப்பது ஒர் அதிசயமன்று. நல்ல பக்தி மிக்க திருப்பணி புரிவோர் இருக்கும்போது இத்தகைய வசதிகட்குக் குறையே இராது. இத்திருக்குளத்தில் நீராடி எம்பெருமான் சேவைக்குத் தயாராகின்றோம். இந்தச் சாரபுஷ்கரிணி உண்டான வரலாற்றை அறிந்து கொள்வதில் நம் மனம் ஈடுபடுகின்றது. இது ஒரு சுவையான வரலாறு; பிரளய காலத்தில் திருமால் நான்முகனிடம் ஒரு மட்கடம் வனைந்து அதில் திருமறைகள், சாத்திரங்கள், ஆகமங்கள் முதலிய அரிய ஞானக் கருவூலங்களைப் பாதுகாப்பாக வைக்கும்படிப் பணிக்கின்றார். அவரும் தந்தையின் கட்டளைப்படியே பல இடங்களில் மண் எடுக்கச் செய்து கடங்கள் செய்ய முனைகின்றார். அத்தனைக் கடங்களும் உடைந்து போகின்றன;