பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி தவழ்கின்றாள். அந்தக் குழந்தையே பரமபதநாதன் என்பதனை அறிகின்றாள் காவிரி. அவள் விரும்பியபடியே பெரிய பிராட்டியார் பூமிப் பிராட்டியாருடன் கருடசேவை தருகின்றான் பரமபதநாதன். காவிரியும் இதுதான் தக்க சமயம் என்று மூன்று வரங்கள் கேட்டுப் பெறுகின்றாள் அந்த வாசுதேவனிடம். எம்பெருமான் அந்தச் சாரகூேடித்திரத்தில் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்பது ஒன்று. அந்தத் திருத்தலத்தில் வதியும் உயிர்கள் அனைத்திற்கும் வீடுபேறு அளிக்கவேண்டும் என்பது மற்றொன்று. தான் கங்கையினும் மேம்பட்டவளாகக் கருதப் பெறல் வேண்டும் என்பது பிறிதொன்று. கங்கையிற் புனிதமாய காவிரி (திருமாலை-28) என்று தொண்டரடிப் பொடி யாழ்வாரால் சிறப்பிக்கப் பெறுகின்றாள் காவிரி. கங்கை பரந் தாமனது திருவடியில் தோன்றினாள் என்பது உண்மையே யாயினும் அவன் காவிரியின் மடியிலல்லவா தவழ்கின்றான்? சரியான காரியவாதி காவிரித் தாய். ஆகவே நாம் புஷ்கரிணிக் கரையிலுள்ள காவிரித் தாயை முதலில் வணங்குகின்றோம். இத்திருக்குளத்தின் கீழ்க்கரையிலுள்ள ஆஞ்சனேயனையும் வடகிழக்கு மூலையிலுள்ள தும்பிக்கை யாழ்வாரையும் வணங்கியபின் திருக்கோயிலினுள் நுழைகின்றோம் திருமங்கை யாழ்வாரின் திருப்பாசுரங்களைச் சிந்திக்க வண்ணம். திருமங்கை யாழ்வார் மட்டிலுமே இத்தலத்து எம்பெரு மானை மங்களாசாசனம் செய்துள்ளார். எம்பெருமானுக்கு அடிமைப்படுவதைக் காட்டிலும் அவனுக்கு அடிமைகளான பாகவதர்கட்கு அடிமைப்படுதல் சிறந்தது என்பது வைணவ தத்துவம். பகவத் பக்தியின் உறைப்பே பாகவத பக்தியில் வெளிப்படும். எம்பெருமானின் பாதுகைகளிலே நாம் ஆதரம் வைத்து அவற்றைக் கண்களில் ஒற்றிக் கொள்வதும், தலைமேலணிந்து கொள்வதும், அவற்றைக் கழுவித் தீர்த்தத் தைப் பருகுவதும் நம்போலியர் செயல்களன்றோ? அது போலவே ஆழ்வாரும் 'திருச்சேறையையும் அவ்விடத்து எம்பெருமானையும் பணிகின்ற பாகவதர்களே எனக்கு உத்தேச்யர்' என்று அருளிச் செய்கின்ற முகத்தால் அத்திருப்பதி யினிடத்தும் அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமானிடத்தும் தமக்குடைய பக்திப்பெருக்கை வெளியிடுகின்றார். 1. பெரி திரு. 7.4; 10.1:6.