பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வெள்ளியங்குடிக் கோலவில் இராமன் திருக்குடந்தை இருப்பூர்தி நிலையத்தருகில் தங்கி யிருக்கும் நம் நினைவில் நம்மாழ்வாரின், 'அடங்குஎழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன் அடங்குஎழில் அஃதுஎன்று அடங்குக உள்ளே' (எழில் - அழகு, எழில் - செல்வம்) என்ற திருப்பாசுரம் குமிழியிட்டு எழுகின்றது. இதன் கருத்தைச் சிந்திக்கின்றோம். எம்பெருமானது ஐசுவரியம் அளவற்றது; அப்படிப்பட்ட ஐசுவரிய மெல்லாம் எம்பெருமானுடையது என்று அநுசந்தித்து நாமும் அந்த ஐசுவரியத்தினுள் அடங்கிப் போக வேண்டும் என்பது ஆழ்வார் நமக்கு உணர்த்தும் உண்மை. அஃதாவது சம்பந்த ஞானம் வேண்டும் என்கின்றார். இதனை ஈட்டாசிரியர் ஒரு சிறு கதையினால் தெளிவாக்கு கின்றார். ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் பொருள் தேடும் விருப்பினால் வெளிநாடு சென்றான்; அவளும் கருவுயிர்த்தாள்; தக்கவயதை அடைந்ததும் மகனும் தனக்கும் தனது தந்தையின் வாணிகமே தொழில் என்று கொண்டு பொருள் தேடப் போனான். இருவரும் தத்தமக்கு வேண்டிய சரக்கு பிடித்துக் கொண்டுவந்து ஒரு கூடாரத்தில் தங்கினர். அந்த இடம் இருவருக்கும் போதவில்லை. இருவரிடையேயும் விவாத முண்டாயிற்று. இருவரையும் அறிவானொருவன் வந்து, இவன் நின் தந்தை; நீ இவன் மகன்' என்று அறிவித்தால், கீழ் இழந்த நாட்களுக்கு வருந்தி, இருவர் சரக்கும் ஒன்றாய், அவன் காப்பாற்றுகின்றவனாய், இவன் காப்பாற்றப்படும் பொருளாய்க் கலந்து விடுவார்களன்றோ? இருக்குவேதத்திலும் இதனை விளக்குவதுபோல், சீவான்மாவும் பரமான்மாவும் உடலாகின்ற 1. திருவாய். 1.2:7.