பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி இத்தலத்து எம்பெருமானைச் சேவித்துவிட்டால் 108 எம்பெருமான்களைச் சேவித்த பலன் கிட்டும் என்ற நம்பிக்கை அடியார்களிடம் இருந்து வருகின்றது. இங்கு வைகானச ஆகம முறைப்படி வழிபாடு நடை பெறுகின்றது. இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வர, அதனையும் ஓதி உளம் களிக்கின்றோம். 'கால்அளவும் போதாக் கடன்ஞாலத் தோர்கற்ற நூலளவே யன்றி நுவல்வாரார் - கோலப் பருவெள்ளி யங்குடியான் பாதகவூண் மாய்த்த திருவெள்ளி யங்குடியான் சீர்' " (கால் - திரிவிக்கிரமன் திருவடி, ஞாலம் - பூமி, நுவல்வார் - உணர்ந்து சொல்லத் தக்கவர்; கோலம் - அழகிய; பருவெள்ளி - வெள்ளிமலை; பாதகவூண் - பிரம்மஹத்தியாகிய பாவம் , மாய்ந்த ஒழித்த சீர் - சிறப்பு) எம்பெருமானது அனந்த கல்யாண குணங்கள் முழுவதையும் தெளிவாகத் தெரிவிக்கின்ற நூல்களும் இவ்வுலகிலில்லை. 'நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு என்பதற்கேற்ப அவ்வெம் பெருமானது குணங்களைச் சிறிதே கூறுகின்ற அந்நூல்களைக் கற்றவர்கள் அதனால் தாம் உணர்ந்து கொண்ட சிறிதளவே எம்பெருமானது திருக்குணங்களைக் கூறவல்லவரே யன்றி முற்றும் உணர்ந்து சொல்லவல்லவர் ஒருவரும் இலர் என்பது அய்யங்கார் பெற வைக்கும் உண்மை. மயனது வேண்டுகோளுக்கிணங்க இங்கு எம்பெருமான் தனது திருவாழி திருச்சங்குகளைப் பெரிய திருவடியிடம் விடுத்துக் கோதண்டராமனாகக் காட்சி அளிப்பதாகப் புராண வரலாறு கூறுகின்றது. இதற்கேற்ப இத்திருத்தலத்தில் எழுந்தருளி யுள்ள கருடன் இவற்றைத் தரித்திருப்பதைக் காணலாம். பகவான் சுக்கிரனுக்கு அருள் புரிந்த தலமாதலால் 'சுக்கிரபுரி' என்றும், பிருகு முனிவர் நீண்ட காலம் தவம் புரிந்து எம்பெரு மானைக் கண்டு பேரின்பம் எய்தினமையால் 'பார்க்கவபுரி' என்றும் இத்தலம் வழங்கப் பெறுகின்றது. இத் திருக்கோயிலின் கருவறை மட்டிலும் கருங்கல்லால் ஆனது. வெளிமண்டபங்கள், மதில், கோபுரம் முதலியவை செங்கலால் கட்டப்பெற்றுள்ளன. 5. நூற். திரு. அந். 29.