பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கண்ணங்குடிக் கண்ணன் 147 எளிமைக் குணங்களாலும் குறைவற்றவன். அங்ங்ணம் வந்து பணிந்தவர்கட்கு அவர்தம் குறைகளைப் போக்கி விருப்பங் களைத் தலைக்கட்டித் தருகைக் கீடான மேன்மைக் குணங் களாலும் குறைவற்றவன். எனவே, பகவத் குணாநுபவம் பண்ணுபவர்கட்கு இரண்டு வகைக் குணங்களும் கிட்டுவனவாக இருக்கும். ஆழ்வார் பெருமக்கள் இந்த இரண்டு வகைக் குணங் களிலும் ஈடுபட்டுப் பேசுவதை அவர்தம் பாசுரங்களில் கண்டு மகிழலாம். பெரியாழ்வார் 'என் நாதன் தேவிக்கு (3,9) என்னும் திருமொழியில் இரண்டு ஆயர் மங்கையரின் நிலையைத் தாம் அடைந்து ஒருத்தி கண்ணன் வரலாற்றைப் பேசுவதாகவும் மற்றொருத்தி இராமாவதார வரலாற்றைப் பேசுவதாகவும் அருளிச்செய்துள்ளார். இந்த ஆழ்வாரே கதிராயிரம் (4.1) என்னும் திருமொழியில் தம்மை இரண்டு வகையாக வகுத்துக் கொண்டு "சர்வேசுவரனைக் கண்ணாலே காண வேண்டும’ என்று தேடுகை ஒரு வகுப்பாகவும், 'அப்படித் தேடுகின்றீர் களாகில் அவனை உள்ளபடிக் கண்டாருளர் என்று விடை சொல்லுகை ஒரு வகுப்பாகவும் அருளிச் செய்ததைக் காண் கின்றோம். இவ்வாழ்வாரின் அருமைத் திருமகளார், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, 'பட்டிமேய்ந்தோர் காரேறு' (நாச். திரு.14) என்னும் திருமொழியில் தன்னையே இரண்டு வகுப் பாக்கிக் கொண்டு இங்கே போதரக் கண்டீரே" என்று வினவு வதும், 'விருந்தாவனத்தின் கண்டோமே" என்று விடையிறுப்பது மாய் அருளிச் செய்ததையும் ஈண்டுச் சிந்திக்கின்றோம். இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் நாம் திருவாரூரில் தங்கியிருக்கும் விடுதியிலிருந்து திருக்கண்ணங் குடியை நோக்கிப் புறப்படுகின்றோம். திருக்கண்ணங்குடி திருவாரூர்-நாகப்பட்டினம் இருப்பூர்திப் பாதையில் கீழ்வேலூர் (கீவலூர்) இருப்பூர்தி நிலையத்தருகில் உள்ளது. இந்த இருப்பூர்தி நிலையத்தில் இறங்கி வடபுறத்திலுள்ள இருப்பூர்தித் தடத்தை யொட்டிச் சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று இவ்வூரை அடையலாம். கண்ணன் கோயில் கொண்டி ருப்பதால் 'கண்ணன் குடி' என்று திருநாமம் பெற்றது. வட மொழியில் இது கிருஷ்ணாரண்ய சேஷத்திரம்' என்று வழங்கு கின்றது. தமிழ்நாட்டின் ஐந்து கண்ணன் கோயில்களில் இதுவும் ஒன்று. ஊர் மிகச் சிறியது; எந்தவித வசதிகளும் இல்லாதது. ஒரு சில சிறிய சிற்றுண்டி விடுதிகள் மட்டிலும் உள்ளன.