பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி திருமங்கையாழ்வார் மட்டிலும் ஒரு திருமொழியால்' இத்தலத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார். பாசுரங்களில் பின் இரண்டு அடிகளில் தலத்தைப் பற்றியும் முன் இரண்டு அடிகளில் எம்பெருமானைப்பற்றியும் பேசுகின்றார் ஆழ்வார். குவளை மலர்கள், தாமரை மலர்கள், ஆம்பல் மலர்கள், செங்கழுநீர் மலர்கள், நெய்தல் மலர்கள் ஆகிய இம்மலர்களால் அழகு விளங்கப்பெற்ற கழனிகளால் சூழப் பெற்றது திருக்கண்ணங்குடி (2) ; இங்கு உரிய காலத்தில் மலரும் புன்னை, மல்லிகை, முல்லை ஆகிய மலர்களின்மீது அளாவி நறுமணத்துடன் கூடிய தென்றற்காற்று எல்லாப் பக்கங்களிலும் வீசும் (3), இங்குள்ள கழனிகளில் மென்னடை அன்னங்கள் மெல்லிய தாமரை மலர்களாகிய இருக்கையில் அலையெறிகின்ற நீரில் உண்டான இலையாகிற குடை நிழலில் இரு பக்கமும் செந்நெற் கவரி வீச வீற்றிருக்கும் (5); குலைகள் நிரம்பிய வாழைத்தோப்பும், ஓங்கி வளர்ந்துள்ள பாக்கு மரங்களும், குரவமரங்களும், நல்ல பலா மரங்களும், குளிர்ந்த மாமரங்களும், குருக்கத்தியும் நிறைந்த செழிப்புள்ள சோலை களால் சூழப்பெற்றது இவ்வூர் (6): அன்றியும், மேகங்கள் முரசொலிபோல் முழங்க, தேன்களில் திரியும் பொறிவண்டுகள் இன்னிசை முரல, கானில் உலாவும் மயிற் கணங்கள் கூத்தாடும் (7); சிறந்த மணிகளையும், மரகதக் குவியல்களையும், வயிரங்களையும், மூங்கிலில் உதிர்த்த முத்துகளையும் ஆற்றலை கள் தள்ளிக் கொண்டு வந்து கழனிகளெங்கும் குவிக்கும் (8); நெருங்கிய குருக்கத்திகளும், சுரபுன்னைச் சோலைகளும், சூழ்ந் துள்ள செண்பகங்களும் ஆகிய இவற்றின் மலர்களில் வண்டுகள் 'தென்ன, தென்ன' என முரன்று இன்னிசைப் பண்களை எழுப்பிய வண்ணம் இருக்கும் (9); உயர்ந்த கொடிகள் ஒளிமிக்க மதிமண்டலத்தளவும் சென்று சேரும்படியான ஓங்கிய சிகரங்களையுடைய அழகிய ஒளிமிக்க மாடமாளிகைகளைக் கொண்டது இவ்வூர் (2,4) ; இவ்வூரில் நான் மறைகள், ஐந்து வேள்விகள், ஆறு சாத்திரங்கள், அரிய கலைகள் இவற்றை ஒம்பும் அந்தணர்கள் வாழ்கின்றனர் (1). இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க இத்திருத்தலத்தின் அழகிய சூழ்நிலையைக் கற்பனையில் கண்ட வண்ணம் இருப்பூர்திப் பாதை யோரத்தில் நடந்து வருகின்றோம்; அரைமணி நேரத்தில் ஊரை அடைகின்றோம். நாம் வந்தபோது கோயில் திருப்பணி 1. பெரி. திரு. 9.1.