பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி காளமேகம்; அவனது கை கால் கண்கள் என்ற உறுப்புகள் செந்தாமரை மலர்கள்; அவன் எழுந்தருளியிருக்கும் இடங்கள் திருவரங்கம், திருக்கண்ண மங்கை போன்ற திருப்பதிகள் என இவ்வாறு தனித்தனியே உவமைப்பொருள்களைக் கொண்டு ஒருவாறு ஊகித்து அறியலாமேயன்றி வேத புருடனது மனம் மொழிக்கு எட்டாத அந்த எம்பெருமானது உண்மை நிலையை நேருக்கு நேரே மெய்ப்பித்து உணர்தல் சிறிதே ஞானமுள்ள நம்மால் எவ்வாற்றானும் முடியாது’ என்பதை உணர்கின்றோம். இத்தலத்தின் சிறப்பான திருவிழா வைகுண்ட ஏகாதசி. வசதி யுள்ள திருத்தலப்பயணிகள் இத்திருநாளன்று இத்திருத்தலத் திலிருக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். இத் திருத்தலத்தின்மீது திருக்கண்ண மங்கை மாலை என்ற ஒர் அருமையான நூல் எழுந்துள்ளது. 101 பாசுரங்களாலான இந்நூல் முத்தமிழ்க் கவி வீரராகவ முதலியாரால் அருளிச் செய்யப்பெற்றது. திருமகள் தோத்திரமாக - தேவி வழி பாட்டிற்குரியதாக - அமைந்துள்ள இந்நூலின் பாடல்கள் சொல் நயமும் பொருள் நயமும் பக்திச் சுவையும் செறிந்தவையாகத் திகழ்கின்றன. பாராயணத்திற்கு மிகவும் ஏற்ற நூல். திருமகள் தோத்திரமாக வேறு தமிழ் நூால் கிடைப்பதரிது. இதிலுள்ள ஒரு சில நயமான பாடல்களை ஈண்டுக் காட்டுவது மிகப் பொருத்த மாகும். காவியும் பூவையும் மேகமும் போல்வண்ணன் கண்ணன் கண்ணும் ஆவியும் போலும் அபிடேக வல்லிநின் அஞ்சனக்கண் ஏவிய முத்தொழின் மூவரும் கேட்பரன் றேஅகிலும் நாவியும் நாறும் குழலாய் கணமங்கை நாயகியே. (8) இதில் அபிடேக வல்லித் தாயார் அஞ்சனக்கண் ஏவியதால் தான் மூவரும் முத்தொழிலில் ஈடுபட்டிருப்பதாகப் பேசுகின்றார் கவிஞர். 8. என் அருமைச்சகோதரராக நான் வைத்துப் போற்றம் வி.பூதுார். திரு. கி. வெங்கடசாமிரெட்டியார் அவர்களின் மணி விழா வெளியீடாக 18-8-1971-ல் அவர்தம் திருமகனார் திரு வே. இலட்சுமிநாராயணன் (B.E.) அவர்களால் வெளியிடப் பெற்றது.