பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7 அணி அரங்கத்து அரவணைப் பள்ளியான்

சரணமடைவதற்குரிய தனது திருவடிகளை நீட்டுவதனாலும், வடக்கத் திக்கு - முரட்டு சமஸ்கிருதம் நடையாடுவதாகி ஆழ்வார் களின் செவிக்கினிய ஈரச்சொல் நடையாடாத தேசமாகையாலே அத்திக்கிலுள்ளாரும் ஈடேறுவதற்கு ஏற்பட வேண்டிய பின் னழகையெல்லாம் காட்டுவதனாலும், தெற்குத்திக்கு - தனது அந்தரங்க பக்தனான வீடணனுக்காகத் தனது திருக் கண்களை வைத்து அன்போடு நோக்குவதனாலும் என இவ்வாறு நான்கு திக்குகளும் பயன்படும் என்க' என விளக்குவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள். சேதநர்க்கு (உயிர் கட்கு)த் தன் மீது அன்பை யுண்டாக்குமாறு எம்பெருமான் தான் பள்ளிகொள்வதற்காகவே திக்குகளைப் படைத்தான் என்பது இப்பாசுரத்தால் பெறப்படும் சிறப்புப் பொருளாகும். திருவரங்க விமானம் பகவானால் நான்முகனுக்கு அளிக்கப் பெற்றதென்றும், அதுவே சூரியகுலத்தைச் சார்ந்த இட்சுவாகு மன்னனுக்கு நான்முகனால் வழங்கப் பெற்றதென்றும் புராணம் கூறுகின்றது. இட்சுவாகு காலம் முதல் அவர் வழித்தோன்ற லாகிய இராமன் காலம் வரையில் அஃது அயோத்தி அரசர்களின் குலதனமாகக் கருதப் பெற்றது. மனித உருவம் கொண்ட பெருமாளாகிய இராமபிரானால் வணங்கப் பெற்றமை பற்றி அரங்கநாதனுக்குப் பெரிய பெருமாள்' என்பது திருநாமம். இந்தக் குலதனம் இராமனால் வீடணனுக்கு அளிக்கப் பெற்றது. இராமனது திருமுடிசூட்டு விழாவிற்குப் பிறகு அயோத்தியி லிருந்து இலங்கைக்குத் திருவரங்க விமானத்துடன் திரும்பிய வீடணன் காவிரி தீரத்தைக் கடந்து செல்லும்போது காவிரி யாற்றுக்கிடையே அரங்கமாக இருந்த தீவினைக் கண்ணுற்றதும் அந்த அழகிற்கு உள்ளதைப் பறிகொடுத்து அங்கேயே விமானத் தை வைத்து அன்றைய வழிபாட்டை நடத்தினான். அப் பொழுது தர்மவர்மன் என்ற சோழ மன்னனும் சில முனிவர்களும் அங்குவந்து அரங்கநாதனை வணங்கினதாகப் புராணம் கூறுகின்றது. வீடணன் இலங்கைக்குச் செல்ல விடைபெற்று விமானத்தை எடுத்துச் செல்ல முயலுகையில் அவனால் அவ்விமானத்தை அசைக்கவும் முடியவில்லை; அரங்கநாதன் வீடணனிடம் தான் காவிரிக்கு அளித்திருந்த வரத்தைப் பற்றிய வரலாற்றை வெளியிட்டு 'அந்த வாக்கை நிறைவேற்ற உன்மூலம் இங்கு வந்து சேர்ந்தோம். இனி நாம் இவ்விடத்தை 13. மேலது - திவ்யார்த்த தீபிகை (உரை காண்க)