பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11 அணி அரங்கத்து அரவணைப் பள்ளியான் (ஓதநீர் - கடல்நீர்; ஏழைகாள் - அறிவிலிகளே கரு அரங்கம் - கருப்பம்; மேயான் - மேவியபெருமாள்) என்பது இவரது பாடல். இறைவன் தம்முடைய கருவுலக வாழ்விலேயே தன்னைப் பக்தனாக்கிவிட்டான் என்று கருது கின்றார் இவ்வாழ்வார். இளமையிலேயே ஏற்பட்ட பக்தி இவரை அவ்வளவு தன்னம்பிக்கை கொள்ளுமாறு செய்து விட்டது. அதனால்தான் அரங்கநாதன்பள்ளி கொண்டுள்ள அத்திசை நோக்கிக் கைதொழுதேன்; கண்டேன்’ என்று பாடி வழுத்துவர். பெரியாழ்வாரின் ஒரே மகள் ஆண்டாள்; அவரால் திருமகள்போல் வளர்க்கப் பெற்றவள். இந்த அன்னையார் திருவரங்கத்துச் செல்வன்மீது ஆராக் காதல் உறுகின்றாள். அப்பெருமான் அவளுக்கு, “என் அரங்கத்து இன்னமுதர் குழல்அழகர் வாய்அழகர் கண்அழகர் கொப்பூழில் எழுகமலப் பூ அழகர்" எனக் காட்சி அளிக்கின்றார். அழகிய மணவாளர்மீது தான் கொண்ட காதலின் உரத்தை, உறுதியை, "மானிடவர்க்கு என்று பேச்சுப் படின் வாழகில்லேன் கண்டாய்' என்று புலப்படுத்துகின்றாள். இறுதியில் அரங்கனையே கணவனாகவும் அடைகின்றாள். இச்சூடிக் கொடுத்த சுடர்க் கொடியைப் போலவே குலசேகரர் புதல்வி சேர்குல வல்லியும், நந்த சோழன் மகள் கமலவல்லியும், பின்னாளில் தில்லி பாதுஷாவின் மகள் துலுக்க நாச்சியாரும் அழகிய மணவாள னாகிய அரங்கநாதனையே காதலித்துப் பேறு பெற்றனர் என்பதை வைணவ உலகம் நன்கு அறியும். இறைவன்மீது பக்திக் காதலுள்ளவர்கள் தங்களைக் காதலிமார்களாகப் பாவித்துக்கொண்டு பக்தி செய்து பாடும் வழக்கத்தை ஆழ்வார்களின் பக்திப் பூங்காவில் காணலாம்.

17. நாச். திரு. 11 : 2.

18. மேலது 1 : 5.