பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி

இதனை 'நாயக நாயகி பாவனை' என்று வழங்குவர்.' கம்ப நாடனும், 'கண்ணில் காண்பரேல் ஆடவர் பெண்ணினை அவாவும் தோளினாய்" என்று முற்றும் துறந்த முனிவர் விசுவாமித்திரரே இராமனது பேரழகில் ஈடுபட்டுப் பேசுவதாக வருணித்துள்ளான். புருடோத் தமனாகிய அழகனது பேராண்மைக்கு முன் உலக முழுவதும் பெண் தன்மையுடையதே என்பது வைணவரது கொள்கை. தம் நிலை மாறிப் பெண்நிலை பெற்றுப் பேசும் ஆழ்வார்கள் காதலியாகப் பேசுவதோடு தோழியாகவும் தாயாகவும் பேசுவ துண்டு. திருமங்கையாழ்வார் தாயார் நிலையில் இருந்து பேசு கின்றார். “தாதுஆடு வனமாலை தாரானோ? என்றென்றே தளர்ந்தாள் காண்மின், யாதானும் ஒன்றுரைக்கில் எம்பெருமான் திருவரங்கம் என்னும், பூமேல் மாதஆளன் குடமாடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற துதாளன் என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சொல்லு கேனே?" சிறிது கூட ஓய்வில்லாமல் கலகலவென்று எதையேனும் பேசிக்கொண்டிருக்கும் என்மகள் இப்போது பேச்சு ஓய்ந்திருக் கின்றாள். அவர் மார்பில் அணிந்த வனமாலையை என் மார்வில் கொணர்ந்து புரட்டீரே" என்று சொல்ல மாட்டாதவளாய் 'வனமாலை தாரானோ? என்று மட்டிலும் சொல்லிக் கொண்டு தளர்கின்றாள். நங்காய் இப்படிப்பட்ட தளர்ச்சி உனக்குத் தகாது' என்று நாம் இதமாக ஏதாவது சொல்லத் தொடங்கினால் நம் சொற்கள் தன் காதில் விழவொண்ணாதபடி காதை மூடிக் கொண்டு 'திருவரங்கம், பெரிய கோயில்’ என்று மிடற்றொலி செய்கின்றாள். இங்ஙனம் செய்தவன் சாதாரணமானவனா?

19. இத்துறையில் ஆழ்வார்கள் வெற்றி கண்டதற்கு சங்க இலக்கிய அகத்துறைப் பாடல்களும், அவற்றின் தத்துவத்தை விளக்கும் தொல்காப்பியமும் அவர்கட்குப் பெரிதும் கைகொடுத்து உதவி உள்ளன.

20. கம்பரா: தாடகை வதை. 41. ஒப்பிடுக, பிராட்டியின் அழகில் ஈடுபட்ட சூர்ப்பனகை 'பெண் பிறந்தேனுக் கென்றால் என் படும் பிறர்க்கு என்றாள்' (சூர்ப்பண 60)

21. பெரி. திரு. 5. 5, 6