பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

அணி அரங்கத்து அரவணைப் பள்ளியான் தாமரைப் பூவின்மீது வாழ்ந்து கொண்டிருந்த பிராட்டி 'இது நெருப்பு' என்று அந்த மலரைவிட்டுத் தன்மார்பில் வந்து சேரும்படி அபகரித்துக் கொண்டவன். அங்ஙனம் பெற்ற ஒருத்தி போதாது என்று ஆயர்பாடிப் பெண்களையெல்லாம் குடக் கூத்தில் தோற்பித்து அவர்களை வசப்படுத்திக் கொண்டவன். பஞ்சவர்க்குத் தூது சென்றவன். அடியவர்களின் பகைவர்கள் யாவரையும் பொடிபடுத்திவிடும் வீரன். இங்ஙனம் தன் மேன்மையும் நீர்மையுமான பண்புகளையெல்லாம் காட்டி என் மகளை இப்பாடுபடுத்துகின்றான். இதை எப்படிச் சொல்லு வேன்?' என்பதாகத் தாய் பேசுகின்றாள். இதே தாய் இன்னும் பேசுகின்றாள்: "வார்ஆளும் இளங்கொங்கை வண்ணம்வேறு ஆயினவாறு எண்ணாள்; எண்ணில் பேர்ஆளன் பேர்அல்லால் பேசாள்.இப் பெண்பெற்றேன் என்செய்கேன் நான்?" இதில் தன் பெண் பசலை நிறங்கொள்ளுகைக்கு வருந்துகின்றாள். பசலையோ நீர்ப்பாசி போன்றது. தண்ணீரில் நாம் கை வைத்தோமாகில் கைப்பட்டவிடங்களில் பாசி நீங்கும், கையை அகற்றிவிட்டோமாகில் அவ்விடமெல்லாம் பாசி மூடிக்கொள்ளும். அங்ஙனமே, காதலர் கைபடும் இடங்களில் பசலை நிறம் நீங்கும் (இயற்கையான அழகிய நிறமே இருக்கும்). அணைத்த கையை நெகிழ்த்தலால்.அப்பசலை நிறம் படரும். "என் மகளுக்கு அறிவு அடியோடு தொலைந்தது. வீணாக ஆசை வைத்ததனால் மனநோய் காரணமாகக் கொங்கை நிறம் வேறுபட்டதே என்று அறியமாட்டுகின்றனள். இவளுக்கு இவ்வுலகைப்பற்றின சிந்தனையும் தன்னைப்பற்றிய சிந்தனையும் கழிந்தனவேயன்றி எம்பெருமானுடைய திருநாமங்கள் இவள் வாயில் வந்த வண்ணம் உள்ளன. இத்தகைய பெண்ணைப் பெற்ற நான் என்செய்வேன்?' என்று வருந்துகின்றாள். இப்பெண் பெற்றேன்... நான் என்பதற்கு இரண்டு பொருள் கூறுவர் பிரதிவாதி பயங்கரம். இப்படி என் சொற்கேளாத அடங்காப் பெண்ணைப் பெற்றேனே! இவளை இழந்து அநியாயமாகக் கெட்டேனே! என் செய்வேன்?' என்று பிறர் நினைக்க வேண்டும். 'என்னைப்போல் பெண்பெற்றார்

22. மேலது. திரு. 5:5:7