பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

அணி அரங்கத்து அரவணைப் பள்ளியான் எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்(டு); என்னும்? இருநிலம் கைத்துழா இருக்கும் செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய். இவள்திறத் தென்செய்கின்றாயே ' (கங்குல் - இரவு; துயில் - உறக்கம்) நீரைவிட்டுப் பிரிந்த மீன் துன்புறுதைப்போல இவள் துன்புறுவாள் என்பதை அறிந்திருந்தும் இங்ஙனே இவளைப் பிரிந்திருத்தல் தகுதியோ? என்ற தொனிப் பொருள் இதில் தோன்றுகின்றது. மேற்கூறிய பாசுரங்களிலெல்லாம் உயிர் (சீவான்மா) இறைவனை (பரமான்மா) நாடிநிற்கும் தத்துவம் பேசப்பெறுகின்றது. ஆழ்வார்கள் யாவரும் திருமால் அவதாரங்களில், குறிப்பாக இராம - கிருஷ்ணாவதாரங்களில், அதி பக்திகொண்டு அநுபவித்துப் பாசுரங்களை அருளியுள்ளார்கள். பெரியாழ் வாருக்கு விஷ்ணுபக்தி என்றாலே கிருஷ்ண பக்திதான். கிருஷ்ண பக்தியே விஷ்ணுபக்தியாகி வைணவம் ஆயிற்று என்று கூறுவது முண்டு. "மாயோன் மேய காடுறை உலகமும்' என்ற தொல்காப்பிய நூற்பா அடியில் கண்ணனை முதலில் வைத்துக் கூறுவதிலிருந்து கிருஷ்ண பக்திக்குத் தமிழ் நாட்டார் அளித்திருந்த முதலிடத்தை ஊகித்துக் கொள்ளலாம். இக் கண்ணன் கதைகளில் தமிழ் நாட்டிற்கே உரிய சில வரலாறு களும், வரலாற்று வேற்றுமைகளும் இங்கு வழங்கி வந்தன. அஃதாவது, கண்ணனைக் குறித்துப் பாரதம், விஷ்ணுபுராணம் முதலான இதிகாச புராணங்களில் சான்று பெறாத சில கதைகளும் அதிகக் கதைகளும் தமிழ் மக்களிடையே வழங்கிவந்தன. கண்ணன் குழலோசை எங்கும் கேட்கின்றது. இயற்கை யில் கண்ணன் இசைமயமாய் இருக்கின்றான். நதியும் கடலும் செய்யும் முழக்கங்கள், வண்டும், குயிலும் பாடும் பாட்டுகள் ஆகியவை யாவும் புல்லாங்குழலின் எதிரொலிகளே என்பது

24. திருவாய்: 7.2:1

25. தொல் - பொருள் - அகத் - நூற்பா 5.