பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி தத்துவம். இவற்றுடன் வேதாந்தத்தின் பனிமூடிய கொடு முடிகளும், சித்தாந்தத்தின் அன்புக் கடலோடு பல்வேறு தனிக்கடல்களும் புல்லாங்குழல் ஓசையில் விதையிலடங்கிய ஆலமரம் போல் அடங்கியுள்ளன என்பது கிருஷ்ண பக்தர்களின் கொள்கை. அழகுக் கடவுளின் முழுமை நிறைந்த அவதாரம் என்று கண்ணனைப் போற்றுகின்ற பெரியாழ்வார், "குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல் குரைகடல்போல் நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமால்' (கொழுமுகில் நீர் நிறைந்த மேகம்; குவளை-நீலோற்பலம்; குரை-ஒலிக்கும்; கனமயில்-மயில்கூட்டம்) என்றவாறு அப்பெருமானை இயற்கை எங்கும் காண்கின்றார்; விண்ணிலும், மண்ணிலும் காண்கின்றார்; காட்டிலும் நாட்டிலும் காண்கின்றார்; குன்றிலும் கடலிலும் காண்கின்றார்; பூவிலும் மயிலிலும் காண்கின்றார். இத்தகைய இயற்கையழகு நிறைந்த ஊர்தான் திருவரங்கம் என்பது இவரது கொள்கை. குன்றுடுபொழில்நுழைந்து கொடி.இடையார்முலைஅணவி மன்றூடுதென்றல்உலாம் மதில் அரங்கம் என்பதுவே.” (பொழில்-சோலை; கொடி இடையார்-கொடிபோன்ற இடையையுடைய மகளிர்; அணவி - படர்ந்து) என்ற அடிகளில் இக்கொள்கை வெளிப்படுவதைக் காணலாம். சைவ சமயத்தைச் சார்ந்த நந்தனாருக்கு முக்தியளித்த சிதம்பரத்தைப் போலவே திருவரங்கம் திருப்பாணாழ்வாருக்கு முக்தி அளித்தது. இருவரும் தாழ்த்தப்பெற்ற குலத்தைச் சார்ந்தவர்கள். யாழையே தெய்வமாகப் போற்றி வந்த பாணர்குல விளக்காகிய திருப்பாணாழ்வார் அந்த இசையாகவும் இசையின் பயனாகவும்இருக்கும் தெய்வத்தைத் திருவரங்கப் பெருமானாகக் கண்டார். இசைப்புலமையுடன் இயற்றமிழ்ப் புலமையும் உடைய இவர் அமலனாதி பிரான் என்ற பத்தே பாசுரங்களைக் கொண்ட சிறு பிரபந்தத்தை இயற்றியுள்ளார்.

26. பெரியாழ் - திரு. 4:8:9

27. மேலது . திரு 4.8:9