பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17 அணி அரங்கத்து அரவணைப் பள்ளியான 'அண்டர்கோன் அணிஅரங்கன் என்அமுதினைக் கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே...' என்ற பாசுரப் பகுதி அரங்கநகர் அப்பன்மீது இவ்வாழ்வார் கொண்டுள்ள ஆராக்காதலை வெளியிடுகின்றது. இச்சிறு பிரபந்தத்தில் இவரது திருவாக்கு நான்மறையின் செம் பொருளைச் செந்தமிழால்வெளியிடுவதாக் கருதுவர் வைணவ பக்தர்கள்.” வேதாந்த தேசிகரும், “பாண்பெருமாள் அருள்செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவு கின்றோம்.” என்று உரைத்துப் போயினர். பாதாதிகேச மாலையாகத் திருவரங்கப் பெரமானைப் பாடியுள்ள இதில் பிரணவத்தின் அகரம், உகரம், மகரம் என்ற மூன்று திருவெழுத்துகளுள் முதல் எழுத்தாகிய அகரத்தை முதற் பாசுரத்தின் முதலிலும், இரண்டாம் எழுத்தாகிய உகரத்தை இரண்டாம் பாசுரத்தின் முதலிலும், மூன்றாம் எழுத்தாகிய மகரத்தை மூன்றாம் பாசுரத்தின் முதலிலும் முறையே அமைத்துள்ள சிறப்பு ஈண்டு கருதத் தக்கது. இப்பாசுரங்கள் அன்பாகிய அமிழ்தம் நிரம்பிய பொற்குடங் களாய் விளங்குகின்றன. வைணவ சமயத்திற்குப் புத்துயிர் அளித்த எம்பெரு மானார் எனப்படும் இராமாநுசரே திருவரங்கக் கோயிலின் நடைமுறைகளை வகுத்தனர் என்று சொல்லப் பெறுகின்றது. இப்பெரியார் பல்லாண்டுகள் வாழ்ந்து வைணவத்தை நாடறியச் செய்தார். சித்தாந்தத்தை நிறுவியவர்களான மத்வர் முதலான ஆசார்யர்களும் இந்நகர்ப் போந்து அரங்கனை வழிபட்டுப் பெரும்பேறு பெற்றனர். கிருஷ்ண சைதன்யர், துளசி தாசர் முதலிய வடநாட்டுப் பக்தமணிகளும் அழகிய மணவாளனை வணங்கி அருள் பெற்றனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

28. அமலனாதி - 10

29. இராமாநுச நூற் - 11

30. தே. பி. - 132