பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி


இசைக் கலைக்குப் புத்துயிர் அளித்த தியாகய்யர் முதலானவர்கள் பல கீர்த்தனங்களால் திருவரங்கத்தைப் போற்றியுள்ளனர்.

'அரவணை விரும்பி அறிதுயில் அமர்ந்த
அணிதிரு அரங்கர் மணிதிகழ் முகுந்தர்
அழகிய மணவாளர்'

என்று திவ்வியகவி போற்றியுள்ள திருவரங்கப்பெருமானது திருக்கோயில் வரலாற்றுக் காலத்திலிருந்து நாளிதுவரை வாடாத சிறப்புடன் திருமால் பக்தியின் வளர்ப்பும் பண்ணையாகத் திகழ்ந்துவந்துள்ளது என்று சொல்லலாம்.

இந்தக் கருத்துகள் நம்சிந்தையில் எழுந்தவண்ணம் இராயர் கோபுரவாயிலாகத் திருக்கோயிலுக்குள் நுழைகின்றோம். தென்திசை நோக்கி அரவணையில் 'உறங்குவான்போல் யோகு செய்யும் அரங்கநாதனைச் சேவிக்க தென் வாயில் வழியாகச் செல்வதுதானே முறை? இந்த வாயில்வரை வண்டிகளும் காரும் செல்லும். இதன் வழியாகச் சித்திரை வீதிக்கு (7-வது வீதி) வருகின்றோம். இந்த வீதியின் நான்கு திக்குகளிலும் கோபுர வாயில்கள் உள்ளன. இவற்றுள் கிழக்கிலுள்ள 'தாமோதரன் கோபுரவாசல்' முக்கியமானது. இந்த வாசலுக்குள் தாமோதரனான கண்ணபெருமானின் சந்நிதி இருக்கிறபடியால் இப் பெயர் வழங்கிவருகின்றது. தேள் முதலிய நச்சுயிர்களின் துன்ப நிவர்த்திக்காக மக்கள் வெண்ணெய் கொண்டுபோய் இந்தப் பெருமானுக்குச் சாத்துவது வழக்கம். இவ்வீதியில் பங்குனியில் நடைபெறும் பெருவிழாவிலும் (ஆதிப்பிரம்மோற்சவம்), சித்திரைத் திருநாளிலும், அரங்கநாதன் வாகனங்களிலும், பல்லக்கிலும், இரதத்திலும் வீதி வலம் வந்து அடியார்கட்குச் சேவை சாதிக்கின்றான். இது தவிர வைகாசி வசந்தோற்சவ இறுதி நாள் குதிரை வாகனத்திலும், உறியடி உற்சவத்தில் இரண்டு பிராட்டி மார்கள், கண்ணன் இவர்களுடனும், மாசி மாதத்தில் தெப்பம், பந்தக் காட்சிகளிலும் இத்திருவீதிவழியாக திருஉலாச் செல்லுகின்றார்.

பல மண்டபங்களைக் கடந்து திருவிக்கிரமன் வீதி (6-வது வீதி) என்ற உள் வீதிக்கு வருகின்றோம். இவ்வீதிக்கும் நாற்புறமும் கோபுர வாயில்கள் உள்ளன. இவற்றுள் மேல்புற31. திருவரங். கலம். - 7