பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி

இதற்கு அடுத்தது யானை ஏறு மண்டபம். இந்த மண்டபத்தில் அரங்கநாதன் எழுந்தருளி இளநீர் அமுது செய்து அதன்பின் யானை வாகனத்தில் ஏறுவார். இம்மண்டபத்தின் வடக்கிலுள்ள உள் ஆண்டாள் முன் நின்று மாலைமாற்றிக் கொண்டு செல்கின்றார். இங்கு வாகன மண்டபம், அமிர்த கலசக் கருடன் சந்நிதி, கூரத்தாழ்வான் சந்நிதி, தொண்டரடிப் பொடி யாழ்வார் சந்நிதி, திருப்பாணாழ்வார் சந்நிதி ஆகிய சந்நிதிகள் உள்ளன. அரங்க விலாசத்தைத் தாண்டியதும் அகளங்கன் திருவீதி (5-ம் வீதி) வருகின்றது. இவ்வீதியின் தென்மேற்கு மூலையில் சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளது. மூலத் திருமேனி முன்பக்கம் சக்கரமாகவும் பின்பக்கம் நரசிம்மனாகவும் சேவை சாதிக்கின்றார். திருவுலாத் திருமேனி எட்டுக்கரங்களுடன் சுதர்சன சக்கரமாகத் தோன்றுகின்றார். பேய், பிசாசு, பில்லிசூனியம் முதலிய வற்றால் ஏற்படும் துன்பங்களைத் துடைப்பவர் இவர். சனிக் கிழமைகள் தோறும் மக்கள் நெய் எண்ணெய்விளக்குகள் ஏற்றி இவரை வழிபடுகின்றனர். இச்சந்நிதியின் தென்-மேற்கு மூலையில் இராமாநுச நுாற்றந்தாதி அருளிய திருவரங்கத்தமுதனார் திருமேனி உள்ளது. சக்கரத்தாழ்வார் கோயிலை யொட்டி வடக்கிலுள்ள தோப்பில் இருக்கும் வசந்த மண்டபத்தில் அரங்கநாதனுக்கு வசந்த உற்சவம் நடைபெறுகின்றது. வசந்த மண்டபத்திற்கு வடபுறம் அகளங்கன் திருவீதியின் வடமேற்கில் சீரங்க நாச்சியாரின் திருச்சந்நிதி உள்ளது. இவர் படிதாண்டாப் பத்தினி. இவரது திருவிழாக்கள் யாவும் இவரது சந்நிதியிலே நடைபெறுவதற்கேற்ப ஒரு பெரிய தனிக் கோயிலாகவே அமைந்துள்ளது. இச் சந்நிதியில் இரண்டு மூல நாச்சியார்களும் ஒர் உற்சவரும் உள்ளனர். இவருக்கு நடை பெறும் நவராத்திரி ஆண்டுவிழா, பங்குனி உத்தரத்தன்று நடை பெறும் ஊடல் உற்சவம் (பிரணயகலக உற்சவம்) அல்லது மட்டையடித் திருவிழா பேர் பெற்றவை. தாயார் சந்நிதிக்குக் கிழக்கில் உள்ளது மேட்டு அழகிய சிங்கரின் சந்நிதியாகும். சந்நிதியின் எதிரே ஒரு நாற்கால் மண்டபம் உள்ளது. இதில்தான் கம்பர் தம் இராமாயணத்தை அரங்கேற்றியதாக வரலாறு. அரங்கேற்றத்தில் இரணியவதைப் படலம் சேர்த்திருப்பது ஆட்சேபிக்கப் பெற்றதாகவும், அதற்கு