பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு அரங்கநாதனின் நான்காவது பிராகாரத்தினுட் புகும் திருவாயிலுக்கு வருகின் றோம். கங்கையும், யமுனையும் இவ்வாயிலுக்குக் காப்புச் செய்கின்றன. இந்தத் திருவாயிலைக் கடந்து ஆலிநாடன் என்னும் திருமங்கை மன்னன் அமைத்த ஆலிநாடன் திருவீதிக்கு (4-வது திருவீதி) வருகின்றோம். எதிரே காண்பது கருடாழ்வார் சந்நிதியின் பின்புறம். முன்புறத்தின் எதிரே நிற்கும் பெரிய திருவடி பெருமாளை நோக்கிக் கூப்பிய கையுடன் இருக்கும் திருக்கோலத்தைக் காண்கின்றோம். இதனையொத்த அழகி யதும், பெரியதுமான கருடாழ்வார் சந்நிதி எங்கும் இல்லை. கருடனைச் சுற்றி எழுப்பப் பெற்றுள்ள மண்டபம் தேவராசன் குறடு என வழங்கப்பெறுகின்றது. இந்த நாற்கால் மண்டபத்தில் பகல் பத்து பத்தாம் திருநாள் இரவு அரங்கநாதன் மோகினி அவதாரத்துடன் வந்து அடியார்கட்குச் சேவை சாதிப்பார். கருட மண்டபத்திற்கு மேல்புறம் நம்மாழ்வார் சந்நிதி உள்ளது. இவர் மதுரகவியாழ்வார் திருமங்கையாழ்வார் இவர்களுடன் எழுந்தருளியுள்ளார். கருட மண்டபத்தின் தென்-கிழக்கு மூலையில் திருக்கச்சி நம்பிகளின் சந்நிதி உள்ளது. இந்த ஆலிநாடன் வீதியை வலமாக வருங்கால் மேல் பட்டாபிராமன் சந்நிதி, முதலாழ்வார்களின் சந்நிதி, தீர்த்தக் கரை வாசுதேவப் பெருமாள் சந்நிதி, இவர் அருகில் சந்திர புஷ்கரிணி ஆகியவை இருப்பதைக் காண்கின்றோம். அரங்க விமானத்தின் மேல் விழும் மழைநீர் முழுவதும் இந்தப் புஷ்கரிணியில் வந்து சேர்கின்றது. பங்குனி உற்சவம் நீங்கலாக ஏனைய உற்சவங் களில் அரங்கநாதன் இந்தப் புஷ்கரிணியில் தீர்த்தம் ஆடுவார். பங்குனி உற்சவத்தில் மட்டிலும் கொள்ளிடத்தில் ஆடுவார். புஷ்கரிணியின் கீழ்க்கரையில் கோதண்டராமர் சந்நிதி உள்ளது. இங்கு குலசேகரப்பெருமாள் சேவை சாதிக்கின்றார். அடுத்து பரமபதநாதன் சந்நிதி, பண்டார மண்டபம், திருமழிசையார் சந்நிதி இவற்றைக் காண்கின்றோம். இனி மூன்றாவது பிராகார வாயிலாகிய ஆரியபடாள் திருவாசலுக்கு வருகின்றோம். ஆதியில் வடக்கிலிருந்து வந்த ஆரிய அந்தணர்களால் காவல் புரியப்பெற்றதால் இவ்வாயில் இத் திருநாமம் பெற்றது. திருவாயில் இருமருங்கும் சக்கரத்தாழ்வாரும் கருடாழ்வாரும் காவல் புரிகின்றனர். இத்திருவாயிலைக் கடந்து குலசேகரன் வீதி (3-வது திருவீதி) க்கு