பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23 அணி அரங்கத்து அரவணைப் பள்ளியான் வருகின்றோம். எதிரில் காண்பது அணியரங்கன் திருமுற்றம். திருவாயிலுக்கு மேல்புறமிருப்பது திருப்பவித்திர மண்டபம். இங்குப் பெருமாளுக்கு ஆவணியில் பவித்திர உற்சவம் நடைபெறும். இம்மண்டபத்தின் மேற்குப் பகுதியில் ஹயக்கிரீவர், சரசுவதி சந்நிதிகள் உள்ளன. திருவாயிலுக்குக் கிழக்கிலிருப்பது கொடியேற்று (துவஜாரோகண) மண்டபம். இம்மண்டபத்தின் வட-மேற்கு மூலையிலுள்ள ஒரு தூணின் மீது அரங்கநாதனைச் சேவித்த வண்ணம் அநுமார் சேவை சாதிக்கிறார். இம்மண்டபத்திற்கு மேற்கிலிருப்பது ஊஞ்சல் மண்டபம். இதில் பெருமாளுக்கு ஐப்பசி மாதத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இத்திருவீதியின் மேல்பாகத்திற்கு திருநடை மாளிகை என்பது திருநாமம். இதன் வடக்கு மூலையில் இருப்பது உள்கோடை மண்டபம். இதில் கோடை உற்சவத்தில் அரங்கநாதன் எழுந்தருளுவார். இப்பிராகாரத்தின் வடக்கு வாயிலாக இருப்பது பரமபதவாசல். இதன் கீழ்ப்புற முள்ள கிணறு விரஜாநதி ஆகும். திருவீதியை வலம் வருங்கால் காண்பது அரவிந்த நாயகியாரது திருமடைப் பள்ளிகளாகும். அடுத்து நேர்படுவது நாழிகைகேட்டான் வாயில். இதனைக் கடந்து இரண்டாம் பிராகாரமாகிய இராஜ மகேந்திர சோழனது திருவீதிக்கு வருகின்றோம். இந்த வாயிலின் முன்புறம் பத்ரன், சுபத்திரன் என்ற தேவதைகளும், பின்புறம் சங்கநதி, பதுமநிதி என்போரும் காப்புச் செய்கின்றனர். இப்பிராகாரத்தில் ஐந்து பருவ உற்சவங்களும் மார்கழி முதல் ஒன்பது நாட்களின் இராப்பத்து உற்சவமும் நடைபெறுகின்றன. சித்திரைக் கோடைத் திருவிழா 6 முதல் 9 நாட்கள் வரை நான்கு நாட்களில் அரங்க நாதன் ஏகாந்த சேவை சாதித்து வீணை கேட்டுக் கொண்டு உள்ளே எழுந்தருளுகின்றார். நாழிகை கேட்டான் வாசலுருக்கு தென்மேற்கே கோயில் கருவூலம் உள்ளது. விலையுயர்ந்த பொருள்கள் யாவும் இங்கு பாதுகாப்பாக வைக்கப் பெற்றுள்ளன. இதற்கு வடக்கில் பெருமாளுக்குச் சந்தனம் அரைக்கவும், திருநீராட்டுக்கு வெந்நீர் போடவும், திரு ஆடைகள் உலர்த்தவும் தனித்தனி அறைகள் உள்ளன. இவற்றின் வடக்கே இருப்பது சுக்கிரவார அறை. இங்குப் பெருமாளுக்கு வெள்ளிக்கிழமைகளில் சாத்த வேண்டிய புனு கெண்ணெய் தயாரிப்பது, கஸ்தூரி திருமண் காப்பு சேர்ப்பது, சந்தனத்திற்கு வாசனைப் பொருள்கள் கலத்தல் முதலியன நடைபெறுகின்றன.