பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி இங்குத்தான் படியேற்றம் சேவை சாதிக்கும் இராஜ மகேந்திரன் திருவாசல், யாக சாலை, விஸ்வக்சேனர் சந்நிதி உள்ளன. அரங்கநாதர் வெளியில் எழுந்தருளும் போதெல்லாம் தனது அரசுப் பொறுப்பை விஸ்வச் சேனரிடம் ஒப்புவித்துச் செல்வதும், திரும்பி வந்ததும் இவருக்குப் பிரதிநிதியான கோவில் மணியக்காரருக்குத் தனது மாலையை வழங்குவதும் நடை முறையிலுள்ளது. சேனை முதலியார் விஸ்வக் சேனர் சந்நிதிக்கும் கீழ்ப்புறமிருக்கும் பரந்த மண்டபம் அர்ச்சுன மண்டபம் ஆகும். இங்குப் பகல் பத்துத் திருவிழா நடைபெறுகின்றது. பத்தாம் நாள் மாலை பெருமாள் மோகனாவதாரத்துடன் இம்மண்டபத்தி லிருந்து புறப்படுகின்றார் கைசிக ஏகாதசி, சீராமநவமி விழாக் களிலும் இம்மண்டபத்திற்கும் வட மேற்கு மூலையில் குலசேகர நாச்சியார் என்னும் சேரகுலவல்லி சந்நிதி உள்ளது. சீராமநவமி யன்று இவர் அர்ச்சுன மண்டபத்தில் அரங்கநாதனுடன் ஒரே ஆசனத்திலமர்ந்து சேவை சாதிப்பார். இந்தச் சந்நிதியின் அருகில் சுல்தானி என்ற துலுக்க நாச்சியாரின் சந்நிதி உள்ளது. சந்நிதியில் நாச்சியார் ஓவியமாக வரையப் பெற்றுள்ளார். பகல் பத்து விழாவில் அரங்கநாதன் இவருக்கு சிறப்புச் சேவை பாலிக் கின்றார். இன்றும் காலை கோதுமை ரொட்டியும், மதுரப் பருப்பும், கிச்சிடி அரிசியாலான பொங்கலும், பச்சைப்பாலும் பெருமாள் அமுது செய்தருளுகின்றார்; கைலி கட்டிக்கொண்டு தீர்த்தமாடுகின்றார். அர்ச்சுன மண்டபத்திற்கு முன்பாக இருப்பது ரேவதி மண்டபம். அரங்கநாதன் இங்குத் தனது நட்சத்திரமான ரேவதி அன்று எழுந்தருளி தீர்ததமாடுதல் முதலியன கண்டருளு கின்றார். இம்மண்டபத்தின் தெற்கிலுள்ளது கிளி மண்டபம். இம்மண்டபத்தின் ஓரிடமிருந்து பரவாசுதேவரைச் சேவிக்கலாம். இதன் தென்-கிழக்கு மூலையிலுள்ளது கிருஷ்ணன் மண்டபம். இங்குக் கிருஷ்ணன், வசுதேவர், தேவகி, உரோகிணி முதலியவர் களின் திருமேனிகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக உள்ளது சீநிவாசனின் அழகிய கற்கள் பதிப்பித்த வண்ணப்படம். திவ்விய கவி பிள்ளைப் பெருமாளய்யங்கார் அரங்கநாதனிடம் கொண் டிருந்த அதிக பக்தியால் 'சீநிவாசனைப்பாடேன்’ என்று சொன்ன போது தானே சீநிவாசன் என்றும், சீநிவாசனே தான் என்றும் தெரிவித்தற்பொருட்டு அரங்கநாதன் இந்த இடத்தில் சீநிவாச னாகச் சேவை சாதித்தார். இதன் நினைவாக உண்டாக்கப் பெற்றது இந்த வண்ணப்படம்.