பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25 அணி அரங்கத்து அரவணைப் பள்ளியான் அடுத்து நம்முன் தோன்றுவது அழகியமணவாளன் திரு. மணிமண்டபம். இதைச் சந்தன மண்டபம் என்றும் வழங்குவர். அரங்கநாதன் விசுவரூபத்தைக் காண்பவர்கள் நிவேதனங்கள் முதலானவை நடைபெற்றுத் தீபாராதனை நடக்கும் போது இங்கிருந்து சேவிப்பார்கள். இந்த மண்டபத்தில் அரங்கநாதன் ஏகாதசி, அமாவாசை முதலான ஐந்து பருவங்களில் எழுந்தருளி திருமஞ்சனம் முதலானவை கண்டருளுகின்றார். அரங்க நாதனின் திருச்சந்நிதி வாயிலுக்கு எதிரில் தாமிரத்தாலான சந்நிதியில் கருடன் சதா சேவையிலிருப்பதைக் காண்கின்றோம். கருட சந்நிதிக்கு மேற்கிலுள்ளது கண்ணாடி அறை. பிரம்மோற் சவங்களில் உற்சவம் முடியும்வரை பெருமாள் இரவில் இந்த அறையில் தங்குவார். இங்கு அரங்க நாதனைச் சேவிப்பது ஒரு திவ்விய தரிசனமாகும். இந்தத் திருமண்டபத்திற்கு கீழ்ப்புறமும் மேற்புறமும் ஏறும் சுருள் யாழிப்படிகள் உள்ளன. இந்தப் படிகள் வழியாகப் பெருமாள் ஏறும்போது படியேற்றம் நடைபெறும். பக்தர்கள் மேற்குறிப்பிட்ட அழகிய மணவாளன் திருமண்டபமிருந்தே அரங்கநாதன் திருச்சந்நிதியை அடைதல் வேண்டும், இதைச்சுற்றி அமைந்திருப்பதே திருச்சந்நிதிப் பிராகாரம் (1-ஆம் திருச்சுற்று). இச்சந்நிதியை ஜயன், விஜயன் என்ற துவாரபாலகர்கள் காப்புச் செய்கின்றனர். அதன் மணிக் கதவுகள் மணிகளால் அலங்கரிக்கப் பெற்றுள்ளன. சந்நிதியின் திருவாயில் திருவனுக்கன் திருவாயில்; இந்த வாயிலையொட்டி 'திருமணத்தூண்’ என்ற இருதூண்கள் உள்ளன. அவை விமானத்தின் மேலிருந்து சேவைசாதிக்கும் பரவாசுதேவரின் கால்களாக அமைக்கப்பெற்றுள்ளன. இந்தத் தூண்களின் அருகி லிருந்து தான் பெருமாளைச் சேவிப்பது ஆதி காலத்து வழக்கமாக இருந்தது. குலசேகராழ்வாரும், காயாம்பூ மலர்ப்பிறங்கல் அன்ன மாலைக் கடிஅரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும் மாயோனை மனத்துளே பற்றி நின்று என் வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ’ (பிறங்கல் - மாலை; அரவு அணை - பாம்புப் படுக்கை; மாலைஅரங்கநாதனை; என்றுகொலோ - என்றைக்கு வாய்க்குமோ)

32. பெரு.திரு.1:2