பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33 உறையூர் அழகிய மணவாளன் முற்காலத்து ஒரு கோழி யானையை எதிர்த்துப் போர் செய்து வென்றது. போர் செய்த இடத்தில் நிறுவப்பெற்ற நகராதலால் கோழி என்பது பெயராயிற்று. முறஞ்செவி வாரணம் முன்சமம் முருக்கிய புறஞ்சிறை வாரணம்’ (முறஞ்செவி வாரணம்-முறம் போன்ற காதுகளையுடைய யானை, சமம் போர்; முருக்கிய-கெடுத்த புறஞ்சிறை வாரணம்- புறத்தே சிறகினையுடைய கோழி) என்பது சிலப்பதிகாரக் குறிப்பு. இந்நகர் நிறுவப் பெற்ற பொழுது சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால் புறஞ் சிறை வாரணம் எனப்பட்டது என்பர் அரும்பத உரையாசிரியர். புறஞ்சிறை வாரணம் என்பதற்கு புறத்தே இறகினையுடைய கோழி, புறத்தே சேரிகளையுடைய கோழியூர் எனப்பொருள் உரைப்பர் அடியார்க்கு நல்லார். உறையூர் தற்சமயம் திருச்சியைச் சார்ந்த ஒரு பகுதி திருச்சி-ஈரோடு இருப்பூர்திப் பாதையில் திருச்சி கோட்டை என்ற நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலை விலுள்ளது. மெயின்-கார்டு கேட் என்ற இடத்திலிருந்து நகரப் பேருந்து வசதி உண்டு. உறையூரிலுள்ள இத்திருத்தலம் 'நாச்சி யார் கோயில் என்றே பொதுமக்களால் வழங்கப் பெறுகின்றது. நாச்சியார் கோயில் இறங்குமிடம் எனக்கேட்டு இறங்கி மேற்கு நோக்கி நடந்து சென்று இத்திருக்கோயிலை அடையலாம். உறையூர் பல நூற்றாண்டுகட்கு முன்னர் சோழர்களின் தலை நகராக இருந்தது. இங்கு ஆண்ட நந்த சோழன் தான் அரங்கநாதரின் அருட் பிரசாதமாகப் பெற்ற தன் மகள் கமல வல்லியை அரங்கநாதனுக்குப் பல சீர்வரிசைகளுடன் திருமணம் செய்து கொடுத்து நாச்சியாருக்குத் திருக்கோயிலைக் கட்டினான். இத்திருக்கோயில் திருவிழா பங்குனித் திங்கள் ரேவதி நட்சத்திரத்தில்தொடங்கிப் பத்து நாட்கள் நடைபெறு கின்றது. பங்குனி உத்திரத்தன்று அரங்கநாதன் உறையூரில் எழுந்தருளி அரங்கநாதனும் கமல வல்லித் தாயாரும் சேர்ந்த நிலையில் காட்சி தருகின்றனர். திருமங்கையாழ்வார் ஒருவரே இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். 9. சிலப். 1.10, 247.48, சுப்பு - 4