பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 சோழநாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி கோழியும் கூடலும்,' என்ற ஒரே சொற்றொடரால் மங்களாசாசனம் செய்துள்ளார். இங்குக் கோழி என்பது உறையூரிலுள்ள திவ்வியதேசம், ‘கூடல்' என்பது மதுரை மாநகரிலுள்ள கூடல் அழகரின் திருக்கோயிலைக் குறிப்பது. கோயில் சிறியதாக இருப்பினும் மிக அழகானது. இங்கு எம்பெருமான் வடக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றான். எம்பெருமானின் திருநாமம் அழகிய மண வாளன்; தாயார் உறையூர் வல்லி, வாசவல்லி என்ற திரு நாமங்களால் வழங்கப்பெறுகின்றார். அழகிய மணவாளர் அரங்க நாதன் உறையூர் வல்லி நாச்சியரை மணந்த இடமாதலால் இத்திருத்தலம் 'நாச்சியார் கோயில் என்ற திருநாமம் பெற்றுப் பொது மக்கள் வாக்கில் வழங்கப்பெறுகின்றது. சேர்ந்து சேவை சாதிக்கும் இருவரையும் மனமாரச் சேவிக்கின்றோம். இத்திருக் கோயிலில் உற்சவ மூர்த்தி இல்லை. திவ்விய கவியின் பாசுரம் நினைவிற்கு வர அதனை மிடற்றொலியிட்டு ஓதுகின்றோம். சிறப்புடைய செல்வத் திருப்பதிகள் போல மறப்புடைய நாயேன் மனத்துள்-உறப்போந்(து) அறந்தையா நின்ற அரங்கா திருவாழ் உறந்தையா இக்குறைந்த(து) ஓது' (மறப்பு-மறதி; உறப்போந்து-எழுந்தருளியிருந்து, அறம் தையா நின்ற-அறத்தைப் பதியுமாறு செய்கின்ற; திரு-இலக்குமி, இங்கு-என் மனத்தில்; ஓது-கூறுக) 'திருப்பதிகளில் திருவுள்ள முவந்து வாழ்வதுபோல மிகவும் தண்ணியனான அடியேன் மனத்தில் வாழ்வது காரணம் பற்றாத நினது கடைக்கண் நோக்கால் வெள்ளம் கோத்து வரும் நின் கருணையே யாகும்” என்கின்றார் அய்யங்கார். உறையூர் திருப்பாணாழ்வார் திருவவதரித்த திருத்தல மாகும். அவர் அரங்கநகர் அப்பன்மீது பத்துப் பாசுரங்களாக லமைந்த அமலனாதி பிரான்’ என்ற சிறிய பிரபந்தத்தை

10. பெரி. திரு. 9.2:5.

11. நூற். திரு. அந். 2.