பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 சோழநாட்டுத் திருப்பதிகள் - முதற்பகுதி எனச் சுருக்கமாக உரைத்துள்ளார். இதனையே பிறிதோரிடத்தில் 'யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்வு இலன்; புலன்ஐந் துக்கும் சொலாப்படான்; உணர்வின் மூர்த்தி, ஆவிசேர் உயிரின் உள்ளால் ஆதுமோர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூட லாமே” (சமயம்-அவத்தை, விகாரம்; ஆவி-உடல் (ஆகு பெயர்); உயிர் - பரமான்மா) என்று விரிவாகவும் வெளியிட்டுள்ளார். உயர்திணை அஃறிணை யாகிய எல்லாப் பொருளும் இறைவன் கலந்து நின்று அவற்றின் அவத்தைகள் தன்னைத் தொடராதபடி இருக்கின்றான். உடலிலுள்ள உயிர் அவ்வுடலுக்குரிய வளர்ச்சி தேய்வு நரை திரை முதலிய விகாரங்களை அடைவதில்லை என்பதை நாம் உணர்வோமாயின், அவ்வுடல் உயிர் இரண்டின் விகாரங்களும் இறைவனை அடைவதில்லை என்பதையும் உணரலாம் என்பது இதற்கு இராமாநுசர் அருளிய விளக்கம் ஆகும்." இந்தச் சிந்தனையுடன் நாம் உத்தமர் கோயிலை வந்தடை கின்றோம். இத்திருத்தல எம்பெருமானைத் திருமங்கை யாழ்வார் மட்டிலுமே மங்காளசாசனம் செய்துள்ளார். திருவரங்கப் பெரு மானை மங்களாசாசனம் செய்யும்போது திருப்பேர்நகர், திருக் குறுங்குடி, திருத்தண்கால் எம்பெருமான்களுடன் கரம்பனூர் உத்தமனையும் சேர்த்து மங்களாசாசனம் செய்கின்றார். பேரானை குறுங்குடிஎம் பெருமானை திருத்தண்கால் ஊரானை கரம்பனூர் உத்தமனை" என்பது பாசுரப் பகுதி. உத்தமன் திருக்கோயில் கொண்டுள்ள இடம் உத்தமர் கோயில் என்ற திருநாமம் பெற்றது என்பதனை யும் அறிகின்றோம்.

3. மேலது - 3.4:10,

4. ஈட்டின் தமிழாக்கம் திருவாய்3.4:10 இன் உரை காண்க.

5. பெரி. திரு. 5.6:2