பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39 கரம்பனூர் உத்தமன்

திருக்கோயிலில் வந்தடைந்த நிலையில் நேராகச் சந்நிதி சென்று கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சயனத் திருக்கோலத்தில் (புயங்க சயனம்) சேவை சாதிக்கும் புருடோத்த மனை வணங்குகின்றோம். தாயாரின் திருநாமம் பூர்வதேவி என்பது. இவரையும் வணங்கி இவருடைய திருவருளைப் பெறுகின்றோம். இங்கு மும்மூர்த்தி வழிபாடு நடைபெறுகின்றது. திருக்கோயிலின் மேற்குச் சந்நிதியில் சிவபெருமான் சேவை சாதிக்கின்றார். வேறோர் இடத்தில் நான்முகனும் இடம் பெறு கின்றான். இவர்களைத் தவிர இத்திருக்கோயிலில் வேணு கோபாலன், இராமர், வரதராசப் பெருமாள், புருடோத்தமன், பூர்ணவல்லித் தாயார், அநுமன், சனி பகவான், தசரத லிங்கம் பிட்சாடண் மூர்த்தி, சவுந்திர பார்வதி, நடராசர், நான்முகன், சரசுவதி ஆகிய கடவுளர்களும் காட்சி தருகின்றனர். ஆழ்வார் பெருமக்களுள் திருமங்கை மன்னன், நம்மாழ்வார், குலசேகராழ் வார் ஆகியோரும், ஆசார்யர்களுள் இராமநுசரும் மணவாள மாமுனிகளும் இடம்பெறுகின்றனர். கதம்பமுனிவர் பரப்பிரம்மத்தைக் காண இங்கு நெடுங் காலம் தவம் புரிந்தார். சிவபெருமானும், நாராயணனும் முனி வருக்கு விசுவருப தரிசனம் அருளினர். ஆகவே, இத்திருத்தலம், 'கதம்பவனம்’ என்ற பெயர் பெற்றது. இம்முனிவரைத் தவிர மார்க்கண்டேயர், சனகர், சதாநந்தர், சனத்குமாரர், திக்குப் பாலகர்கள், கருடன் ஆகியோரும் தவம் புரிந்த இடமாகும் இக் 'கதம்ப வனம்’. இந்த நிலையில் திவ்விய கவியின் பாசுரம் நினைவிற்கு வர அதனை ஓதுகின்றோம். 'சிலமா தவம்செய்தும் தீவேள்வி வேட்டும் பலமா நதியிற் படிந்தும் - உலகில் பரம்பரநூல் சுற்றுப் பயனில்லை நெஞ்சே! கரம்பனூர் உத்தமன்பேர் கல்" (மாதவம் - பெருந்தவம்; வேட்டும் - வேள்விகள் செய்தும்; மாநதி - சிறந்த நதி, பரம்பர - விரிவாக, கல் - பலதரம் கூறு) என்பது பாசுரம். 'பகவானை அடைவதற்கு விரோதியான உடலுறவினை அறுத்துத் தள்ளி எம்பெருமானை அடைய

6. நூற். திருப். அந்-5.