பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. திருவெள்ளறை அஞ்சன வண்ணன்

"உடல் மிசை உயிர் எனக் கரந்துளன்' என்பது சரீர-சரீரிபாவனையைக் காட்டும் நம்மாழ்வாரின் திருவாக்கு. உடலினுள் இருக்கும் உயிருக்குச் சில வேறுபாடுகள் உண்டா வதற்கும், உடல் உயிர் இவ்விரண்டினுள் இருக்கும் இறை வனுக்கும் யாதொரு வேறுபாடும் உண்டாகாமைக்கும் காரணம் என்ன? ஆன்மா உடலில் கர்மம் அடியாகப் பிரவேசிக்கின்றது. இறைவன் உடல், உயிர் இவற்றினுள் திருவருள் காரணமாகப் பிரவேசிக்கின்றான். ஆகவே வினைத் தொடர்பு உண்மையால் அதன் பயனை அடைகின்றது உயிர். அதனால் உயிருக்குச் சில வேறுபாடுகள் உண்டாகின்றன. வினைத் தொடர்பு இன்மையால் இறைவன் ஒருவித வேறுபாடும் எய்துவது இல்லை. இதனை ஈட்டாசிரியர் ஓர் அருமையான எடுத்துக் காட்டால் விளக்கு கின்றார். பிறருக்குத் தீங்கிழைத்த ஒருவன் அதன் காரணமாக ஒறுக்கப்பெற்றுச் சிறையில் இருக்கின்றான். சிறைச்சாலைச் செயல்கள் சரிவர நடைபெறுகின்றனவா என்பதைக் காண்பதற்கு அரசன் சிறையுள் புகுகின்றான். அதே நேரத்தில் தீங்கிழைத் தவன், அரசன் ஆகிய இருவரும் சிறைச்சாலையினுள் உள்ளனரா யினும், இருவர் மன நிலையும் ஒன்றாகாது. தீங்கிழைத்தவன் மனம் துன்புறுகின்றது. நாடாளும் அரசனின் மனம் அருளுதலை உடையவனாக உள்ளது. தீங்கிழைத்தவன் அநுபவிக்கும் சிறைத் துன்பம் அரசனுக்கு இல்லை. உயிரின் நிலை தீங்கிழைத் தவன் நிலையினையும் இறைவனின் நிலை நாடாளும் மன் னனின் நிலையையும் ஒத்துள்ளன. இப்பொழுது காரணம் தெளிவாகின்றது அல்லவா? இந்தச் சிந்தனையுடன் கரம்பனூரிலிருந்து திருவெள் ளறையை வந்து அடைகின்றோம் பேருந்து முலம். இது திருச்சி - துறையூர் நெடுஞ்சாலையில் உள்ளது. சாலையிலிருந்து திருவெள்ளறைக்கு ஒரு கிளைச் சாலை உள்ளது. கைகாட்டியும்

1. திருவாய். 1.1.2

2. ஈட்டின் உரை காண்க