பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 1.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிந்துரை (ஜஸ்டிஸ் ஜி. இராமாநுஜம்) 'செளலப்பியத்திற்கு எல்லை நிலம் அர்ச்சாவதாரம்' என்று முமுட்சுப்படி பேசும். இதுவே சேதநருக்கு நிலம் அளிப்பதெனக் கொண்டனர் ஆழ்வார் பெருமக்கள். இந்த அர்ச்சாவதார எம்பெருமான்களை 108 என்று கணக்கிட்டு கூறுபவர்களின்மீது பாசுரங்கள் பாடிப் போற்றியுள்ளார்கள். இந்த எம்பெருமான்கள் எழுந்தருளியுள்ள சோழ நாட்டுத் திவ்விய தேசங்கள் 40. இந்த நூல் திருவரங்கம் பெரிய கோயில் தொடங்கி திருக்கண்ணமங்கை முடிய 20 திருக் கோயில்களைப் பற்றியும் அங்குப் பாங்காக எழுந்தருளியுள்ள அர்ச்சாவதார எம்பெருமான்களைப் பற்றியும் கூறுவது. ஏனைய 20 திருத்தலங் கள் பற்றி அடுத்த பகுதியில் வெளிவரும் போலும். சைவ சமயத்தைச் சார்ந்தவர் பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் என்பதை நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து பயின்றபோதே அறிவேன். வைணவ சமயத்தைச் சார்ந்த நான் இன்று வைணவ சமயத்தில் பேராசிரியர் ரெட்டியார் இவ்வளவு ஊற்றம் பெற்றிருப்பதையும் ஆழ்வார் பாசுரங்களில் மிகவும் ஆழங்கால் பட்டிருப்பதையும் காணும்போது எனக்குப் பெரு வியப்பு ஏற்படுகின்றது. ஆழ்வார் பாசுரங்களில் இவர் தன்னைப் பறிகொடுத்திருப்பதை நுாலெங்கும் காணலாம். ஆங்காங்கு வைணவ தத்துவக் கருத்துகளை எடுத்துக் காட்டியிருப்பது இத்திருத்தலப் பயண நூலுக்கு பொலிவும் அழகும் ஊட்டி யிள்ளன. தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பெறும் மாயோன்' தமிழ் நாட்டில் கண்ணனாக வளர்ந்ததையும் இதுவே தமிழ் நாட்டார் கிருஷ்ணபக்திக்கு முதலிடம் தந்திருப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் (பக்கம்-15) ஆசிரியர் சுட்டியுள்ளது நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. iv